விக்டோரியா கௌரி உள்பட 5 கூடுதல் நீதிபதிகள், சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 


5 நிரந்தர நீதிபதிகள் நியமனம்:


உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்பட ஐந்து மூத்த நீதிபதிகள் கொண்ட கொலீஜியம் அமைப்பே, உச்ச நீதிமன்ற, உயர் நீதிமன்ற நீதிபதிகளை பரிந்துரை செய்து வருகிறது. அந்த பரிந்துரைகளை ஏற்று மத்திய அரசு நீதிபதிகளை நியமிக்கலாம்.


ஆனால், சில சமயங்களில், கொலீஜியம் பரிந்துரைத்த நீதிபதிகளை மத்திய அரசு நியமிக்காமலும் இருந்துள்ளது. கொலீஜியம் அமைப்புக்கு முடிவு கட்டும் வகையில் கடந்த 2015ஆம் ஆண்டே நீதிபதிகள் நியமனத்தில் மத்திய அரசுக்கும் சமமான அதிகாரம் வழங்கும் தேசிய நீதித்துறை நியமன ஆணையத்தை மத்திய அரசு அமைத்தது.


ஆனால், அந்த சட்டத்தை உச்ச நீதிமன்றம் ரத்து செய்து ஆணையத்தை கலைத்தது. இதை தொடர்ந்து, இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கும் மத்திய அரசுக்கும் இடையே பதற்றமான சூழல் நிலவி வந்தது. ஆனால், மத்திய சட்டத்துறை அமைச்சராக பதவி வகித்த கிரண் ரிஜிஜு, மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராக மாற்றப்பட்டு, சட்டத்துறை அர்ஜூன் ராம் மேக்வாலுக்கு ஒதுக்கப்பட்டதில் இருந்து சுமுகமான உறவு நீடித்து வருகிறது.


சர்ச்சையை கிளப்பிய நீதிபதி:


இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தற்போது கூடுதல் நீதிபதிகளாக பணியாற்றி வரும் விக்டோரியா கௌரி, பாலாஜி, ராமகிருஷ்ணன், கலைமதி, திலகவதி ஆகிய ஐந்து பேரையும் நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார். 


உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியின் ஆலோசனையின் பேரில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக குடியரசுத் தலைவர் மாளிகை செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இவர்களில் விக்டோரியா கவுரி நீதிபதியாக நியமிக்கப்படுவதற்கு ஏற்கனவே கடும் எதிர்ப்புகள் இருந்து வந்தது. ஆனால், அதை எல்லாம் மீறிதான் அவர் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். கொலிஜியம் அமைப்பு இவரது பெயரை பரிந்துரை செய்தது முதலே சர்ச்சை வெடித்து வந்தது.


விக்டோரியா கவுரி பாஜகவில் பொறுப்பு வகித்தவர் என்றும், அவரை நீதிபதியாக நியமிக்கக்கூடாது என்று சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர்கள் உள்பட பலரும் அப்போது கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.