சென்னையை அடுத்த கேளம்பாக்கத்தில் அமைந்திருக்கும் சுஷில் ஹரி பள்ளி மாணவிகளுக்கு, பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக வந்த புகார்களின் அடிப்படையில், அந்தப் பள்ளியின் நிறுவனரான சிவசங்கர் பாபா டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து அவர் மீது சிபிசிஐடி போலீசார் 3 போக்சோ வழக்குகள் பதிவு செய்தனர். 


இதையடுத்து அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவிகள் அளித்த புகார்களின் அடிப்படையில், சிவசங்கர் பாபா மீது மேலும் 2 போக்சோ வழக்குகளும், ஒரு பெண் வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்குகளும் பதிவு செய்யப்பட்டன. இதில் இதுவரை 2 வழக்குகளுக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.


மேலும், அந்தப் பள்ளியின் முன்னாள் மாணவிகள் மேலும் சிலர் பாதிக்கப்பட்டுள்ளதாக அளித்துள்ள புகாரின் அடிப்படையில், சிவசங்கர் பாபா மீது மேலும் 3 போக்சோ வழக்குகளை சிபிசிஐடி போலீஸார் பதிவு செய்தனர். இதன் மூலம் சிவசங்கர் பாபா மீது இதுவரை 8 போக்சோ வழக்குகள், ஒரு பெண் வன்கொடுமை வழக்கு என மொத்தம் 9 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு  சிவசங்கர் பாபாவின் ரகசிய அறை திறக்கப்பட்டது. இதற்காக புழல் ஜெயிலில் இருந்த சிவசங்கர் பாபா அழைத்து செல்லப்பட்டு ரகசிய அறை அவருடைய கை ரேகையை வைத்து திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இரண்டு முறை சென்னை சிபிசிஐடி போலீசார் சம்பந்தப்பட்ட ரகசிய அறையில் தொடர்ந்து ஆய்வு மேற்கொண்டனர்.


இதில் சிவசங்கர் பாபா பயன்படுத்திய லேப்டாப் மற்றும் கணினி உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை கைப்பற்றிய சிபிசிஐடி போலீசார் அதை வைத்து விசாரணையை தீவிரப்படுத்தனர்.


இந்நிலையில், பள்ளி மாணவரின் தாய்க்கு பாலியல் தொல்லை அளித்ததாக சிவசங்கர் பாபா மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டது. 2010ம் ஆண்டில் பாலியல் தொல்லை தந்ததாக கடந்த ஆண்டு  சிவசங்கர் பாபா மீது வழக்கு தொடரப்பட்டிருந்தது.


பாலியல் தொல்லை தீவிர குற்றமாக இருந்தாலும், பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக புகார் அளிக்க தயங்குகின்றனர். 3 ஆண்டு தண்டனை விதிக்க வகை செய்யும் குற்றச்சாட்டின் கீழ் 10 ஆண்டுகள் தாமதமாக வழக்கு பதிவு செய்ததாக சிவசங்கர் பாபா தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.


இரு தரப்பு வாதத்தை கேட்டறிந்த நீதிமன்றம், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 473ஆவது பிரிவின் கீழ், தாமதமாக புகார் அளித்ததற்கான மனுவைத் தாக்கல் செய்யாத காவல்துறையால் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் குறைபாடு காரணமாக முதல் தகவல் அறிக்கை ரத்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தது.