Civil Judge Exam: தமிழகத்தில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதிகள் பதவிகளுக்கான தற்காலிக தேர்வு பட்டியலை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
சிவில் நீதிபதி தேர்வு:
கடந்த ஆண்டு ஜூன் மாதம் தமிழ்நாட்டில் கீழமை நீதிமன்றங்களில் காலியாக உள்ள 245 சிவில் நீதிபதி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டது. இந்த தேர்வுக்கு கடந்த ஜூன் 30ஆம் தேதியுடன் விண்ணப்பிப்பதற்கான அவகாசம் முடிந்த நிலையில், 12,037 பேர் விண்ணப்பித்திருந்தனர்.
6,031 ஆண்களும், 6,005 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர் ஒருவர் என மொத்தம் 12 ஆயிரத்து 037 பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்கான முதல் நிலை தேர்வு சென்னை, மதுரை, திருச்சி, கோவை, நெல்லை, சேலம், தஞ்சை, வேலூர் உள்ளிட்ட 9 இடங்களில் கடந்த ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி நடந்தது.
இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு நவம்பர் 4,5ஆம் தேதிகளில் மெயின் தேர்வு நடைபெற்றது. இதில் தேர்ச்சி பெற்ற 472 பேருக்கு நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வு கடந்த ஜனவரி 29ஆம் தேதி முதல் பிப்ரவரி 10ஆம் தேதி வரை நடந்தது.
இந்த நிலையில், கடந்த 16ஆம் தேதி சிவில் நீதிபதிகளுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் 245 பேர் பட்டியலை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் வெளியிட்டது. இந்த நிலையில், 245 சிவில் நீதிபதிகளுக்கான தேர்ச்சி பட்டியலை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன.
தேர்வு பட்டியலை ரத்து செய்த நீதிமன்றம்:
இந்தத் தேர்வு பட்டியலில் அதிக மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்கள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இந்த வழக்குகளை நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் மற்றும் கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு விசாரித்தது.
அப்போது, அதிக மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்களை, பொது பிரிவில் சேர்க்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மீறி, இட ஒதுக்கீட்டின் கீழ் சேர்க்கப்பட்டுள்ளதாகக் கூறி, கடந்த 16ஆம் தேதி வெளியிடப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியலை ரத்து செய்து உத்தரவிட்டது.
அதிக மதிப்பெண்கள் பெற்ற விண்ணப்பதாரர்களை பொது பிரிவில் சேர்த்தும், மீதமுள்ள விண்ணப்பதாரர்களை இட ஒதுக்கீட்டு முறையை பின்பற்றி, காலிப் பின்னடைவுப் பணியிடங்களிலும், தற்போதைய காலியிடங்களிலும் சேர்த்து திருத்தி அமைக்கப்பட்ட தற்காலிக தேர்வு பட்டியலை இரண்டு வாரங்களில் வெளியிட வேண்டும் என அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம், கே.ராஜசேகர் உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் படிக்க
Chennai Bomb attack: சென்னையில் பயங்கரம் - வெடிகுண்டு தாக்குதலில் திமுக பிரமுகர் படுகாயம்