செங்கல்பட்டு மாவட்டம் வண்டலூர் அருகே மேம்பாலத்தின் அடியில் சென்று கொண்டிருந்த திமுக வடக்கு ஒன்றிய செயலாளர் ஆராவமுதன் என்பவர் மீது நாட்டு வெடிகுண்டு வீசி மர்ம நபர்கள் தாக்குதல் நடத்தினர். அதோடு அவரது கை ஒன்றையும் துண்டாக வெட்டியுள்ளனர். இதில் அவரது இடது தோள்பட்டை மற்றும் தலையில் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அங்கு அவர் உயிருக்கு போராடி வந்தார். இதனிடையே,  வெடிகுண்டு வீசி கொலைவெறி தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் யார் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அரசியல் முன்பகை காரணமாக இந்த தாக்குதல் நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. போதைப்பொருள் பயன்பாடு போன்ற சம்பவங்களால் தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீர்கெட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. இந்த நிலையில், ஆளுங்கட்சியை சேர்ந்த பிரமுகர் ஒருவரே, வெடிகுண்டு வீசி வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


நடந்தது என்ன?


வண்டலூர் மேம்பாலம் கீழ்பகுதியில் ஆராவமுதன் கட்சி அலுவலகம் நடத்தி வருகிறார். இந்த நிலையில் வண்டலூர் மேம்பாலம் அருகே புதிதாக பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.  இது நாளை திறக்கப்பட உள்ள நிலையில் பேருந்து நிலையத்தை பார்ப்பதற்காக தனது காரில் ஆராவமுதன் வந்தபோது அங்கு மறைந்திருந்த மர்ம  நபர்கள் திடீரென நாட்டு வெடிகுண்டுகளை காரின் மீது தூக்கி வீசி உள்ளனர். இதில் காரின் முன் பக்கம் முழுவதும் கண்ணாடி உடைந்தது . இதை பார்த்த ஆராவமுதன் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்ற போது,  மர்ம நபர்கள் கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களால் அவரை வெட்டியதில் கைதுண்டாக போனது . மேலும் தலை கை, கால் என பல்வேறு பகுதிகளில் வெட்டியதில் பலத்த காயமடைந்தார். உயிருக்கு போராடிய அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு குரோம்பேட்டையில்  உள்ள ஒரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஆராவமுதன் உயிரிழந்தார். இதையறிந்த திமுகவினர் பலரும் மருத்துவமனை வளாகத்தில் குவியத் தொடங்கினர். இதனால், அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.