அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை பதவி நீக்கம் செய்ய தமிழ்நாடு முதலமைச்சருக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. எந்த இலாகாவும் இல்லாமல் அமைச்சராக தொடர பலன் எதுவும் இல்லை என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி பறிக்கப்படுகிறதா? 


செந்தில் பாலாஜி அமைச்சராக தொடர்வதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்டு உத்தரவிடக் கோரி ராமச்சந்திரன் என்பவரும், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தனும் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.


செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நியமித்த உத்தரவை எதிர்த்தும், அவரை பதவி நீக்கம் செய்த உத்தரவை ஆளுநர் நிறுத்தி வைத்ததை எதிர்த்தும் வழக்கறிஞர் எம்.எல்.ரவி என்பவரும் வழக்கு தொடர்ந்தார்.


இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கங்கபுர்வாலா, நீதிபதி ஆதிகேசவலு ஆகியோர் கொண்ட அமர்வு விசாரணை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது. செந்தில் பாலாஜியை அமைச்சராக வைத்திருப்பது தார்மீக அடிப்படையில் சரியானதல்ல என நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.


அதிரடி காட்டிய சென்னை உயர் நீதிமன்றம்:


"அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக நீடிப்பது அரசியலமைப்பு நெறிமுறைகளுக்கு எதிரானது மட்டும் அல்லாமல், தார்மீக அடிப்படையில் சரியானதல்ல. செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் நீடிப்பது  குறித்து தமிழ்நாடு முதல்வர் தான் முடிவெடுக்க வேண்டும்" என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து, வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.


தீர்ப்பை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அதிமுக வழக்கறிஞர் இன்ப துரை, "இலாகா இல்லாத ஒருவர் அமைச்சராக தொடர முடியுமா என்று பல வாதங்கள் முன்வைத்தோம். அவர் அமைச்சராக தொடர்வதால் என்ன பலன் இருக்கிறது என நீதிபதியும் கேள்வி எழுப்பினார். இது ஒரு நல்ல தீர்ப்பு.
நல்லவர்களை அருகி வையுங்கள் என்று நீதிமன்றம் சொல்லியுள்ளது" என்றார்.


கடந்த ஜூன் மாதம், தமிழ்நாடு அமைச்சரவையில் இருந்து அமைச்சர் செந்தில் பாலாஜியை நீக்கி ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்தார். பின்னர் மத்திய உள்துறை  அமைச்சர் அமித்ஷாவின் அறிவுறுத்தலின் பேரில் ஆளுநர் ஆர்.என்.ரவி அந்த உத்தரவை வாபஸ் பெற்றார். அமைச்சர் பதவியில் இருந்து செந்தில் பாலாஜியை ஆளுநர் நீக்கிய விவகாரம் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.


அமைச்சர் பதவியில் இருந்து ஒருவரை தூக்கும் அதிகாரம் ஆளுநருக்கு இல்லை என சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர். இந்த சூழலில், இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றது. ஆனால், இந்த விவகாரத்தில் இறுதி முடிவை எடுக்கும் அதிகாரம் முதலமைச்சருக்கே இருக்கிறது என கூறி, வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.