பேருந்துகளில் ஏன் மாற்றுத் திறனாளிகளுகாக சாய்தள வசதி ஏற்படுத்தப்படவில்லை என அரசுக்கு ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது.அரசுப் பேருந்துகளில் ஏன் மாற்றுத் திறனாளிகளுக்காக சாய்தள வசதி ஏற்படுத்தப்படவில்லை என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அனைத்து அரசுப் பேருந்துகளிலும் மாற்றுத் திறனாளிகள் ஏறி, இறங்க வசதியாக சாய்தள படி வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. 







இந்நிலையில், அரசுப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதி ஏற்படுத்தித் தரக் கோரி வைஷ்ணவி ஜெயகுமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி அடங்கிய முதன்மை அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனு தாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.யோகேஸ்வரன், "2016 ஆம் ஆண்டே உயர் நீதிமன்றம் அரசுப் பேருந்துகளில் மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியாக சாய்தளம் இருக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அனைத்துத் தடங்களில் செல்லும் பேருந்துகளிலும் இந்த வசதி செய்து கொடுக்கப்பட வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால், அரசு மிகக் குறைந்த அளவிலேயே மாற்றுத் திறனாளிகளுக்கான அத்தகைய சாய்தள படி வசதி கொண்ட பேருந்துகளை வாங்கியுள்ளது" என்றார்.
இந்த வழக்கில், சமரச முயற்சிக்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞர் மோகன் கூறுகையில், "அரசு புதிதாக கொள்முதல் செய்யும் எந்தப் பேருந்திலும் மாற்றுத் திறனாளிகளுக்கான வசதி இல்லை. 2016 ஆம் ஆண்டு தொடங்கி இதுவரை தமிழக அரசு 4000 பேருந்துகள் வாங்கியுள்ளது. ஆனால் எந்த ஒரு பேருந்திலும் சென்னை உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல் பின்பற்றப்படவில்லை" என்று கூறினார்.
மாநகரப் பேருந்து போக்குவரத்துக் கழகம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், அத்தைகை பேருந்துகள் மிகவும் விலை உயர்ந்ததாக உள்ளன. நாம் ஏழை நாட்டில் வசிக்கிறோம். பெருந்தொற்று நம்மை இன்னும் ஏழையாக்கி உள்ளது என்று கூறினார். அதற்கு தலைமை நீதிபதி நம் ஊரில் எத்தனை சட்டமன்ற உறுப்பினர்கள் ஏழையாக இருக்கின்றனர் எனக் கேள்வி எழுப்பினார்.
மேலும் தலைமை நீதிபதி கூறுகையில், "மாநில அரசு உயர் நீதிமன்ற உத்தரவை மீறியுள்ளது தெளிவாகத் தெரிகிறது. மாநில அரசு வாங்கும் அனைத்துப் பேருந்துகளுமே மாற்றுத் திறனாளிகளுக்கும் உகந்ததாக இருக்க வேண்டும் என்பதை அரசுக்கு இந்த நீதிமன்றம் நினைவு படுத்துகிறது. ஏதோ ஒன்றிரண்டு தடங்களில் மட்டும் குறைந்த சதவீதத்தில் அத்தகைய பேருந்துகளை இயக்கினால் அது போதுமானதாக இருக்காது" என்று தெரிவித்துள்ளார்.