பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை ஒவ்வொரு நாளும் விசாரித்து, 6 மாதங்களுக்குள் முடிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு இந்த உத்தரவு பிறக்கப்பிட்டுள்ளதோடு, வழக்கில் ஜாமீன் மனுவைத் தாக்கல் செய்திருந்த அஇஅதிமுக நகர மாணவர் அணி செயலாளர் அருளானந்தத்திற்கு ஜாமீன் மறுக்கப்பட்டுள்ளது. 


கடந்த 2019ஆம் ஆண்டு, தமிழ்நாட்டையே உலுக்கிய வழக்காகப் பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு குறித்த தகவல்கள் வெளியாகின. பெண்களைப் பாலியல் வன்கொடுமை செய்ததோடு, ஆபாசமாகப் படம் எடுத்து மிரட்டிய குற்றத்திற்காக திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்த், மணிவண்ணன் ஆகியோர் முதற்கட்டமாகக் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய சிறையில் தண்டனை அனுபவித்து வருகின்றனர். அப்போதைய ஆளுங்கட்சி பிரமுகர்களுக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பதாக புகார்கள் எழுந்ததையடுத்து, இந்த வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டிருந்தது. 



சென்னை உயர்நீதிமன்றம்


 


அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்காகக் கருதப்பட்ட இந்த வழக்கு, சிபிசிஐடியிடம் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றம் செய்யப்பட்டது. சிபிஐ விசாரணை முடிந்த பிறகு, இந்த வழக்கு குறித்த குற்றப்பத்திரிகையை சிபிஐ அதிகாரிகள் கோவை மகளிர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். 


கடந்த ஜனவரி மாதம், இந்த வழக்கு தொடர்பாக பொள்ளாச்சி நகர அஇஅதிமுக மாணவர் அணி செயலாளர் அருளானந்தம், ஹேரன் பால், பாபு ஆகிய மூவரையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்து, கோவை மகளிர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர். மூவரும் நீதிமன்றக் காவலில் வைக்கப்படுமாறு உத்தரவிடப்பட்டதோடு, அஇஅதிமுகவில் இருந்து அருளானந்தம் நீக்கப்பட்டார். 


கொரோனா ஊரடங்கு விதிகள் அமலில் இருந்த போது, வழக்கு விசாரணை நடைபெற்றது. மூவரும் சிறையில் இருந்தபடியே, வீடியோ கான்பரசிங் மூலம் நீதிமன்றத்தின் முன்பு ஆஜர்ப்படுத்தப்பட்டு வந்தனர். மூவருள் அருளானந்தம் மட்டும் தனக்கு ஜாமீன் வேண்டும் என மனுத்தாக்கல் செய்திருந்தார். எனினும், 8 பெண்களின் புகாரின் அடிப்படையில் வழக்கு நடைபெற்று வருவதால், அருளானந்தத்திற்கு ஜாமீன் வழங்கினால் வழக்கு விசாரணையில் சாட்சியங்கள் கலைக்கப்படக் கூடும் என சிபிஐ தரப்பு கோரியது. அதனையேற்று கோவை மகளிர் நீதிமன்றம் அவருக்குக் கடந்த ஜூலை மாதம் ஜாமீன் அளிக்க மறுத்திருந்தது.



அருளானந்தம்


 


தனக்கு ஜாமீன் அளிக்க மறுக்கப்பட்டதையடுத்து, அருளானந்தம் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி தண்டபாணி, அரசுத் தரப்பு வழக்கறிஞர்களின் வாதத்தைக் கேட்டறிந்தார். சிபிஐ தரப்பில் ஆள் பற்றாக்குறை இருப்பதால், வழக்கு விசாரணை தாமதாக நடைபெறுவதாக சிபிஐ தரப்பில் கூறப்பட்டது. தமிழ்நாடு காவல்துறை தரப்பில் இருந்து, வழக்கை விரைவாக முடித்துத் தர காவல்துறையின் ஒத்துழைப்பு முழுமையாக வழங்கப்படும் எனக் கூறப்பட்டது. 


நீதிபதி தண்டபாணி அருளானந்தத்தின் ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்ததோடு, வழக்கு விசாரணையை ஒவ்வொரு நாளும் நடத்தி, அடுத்த 6 மாதங்களுக்குள் வழக்கை முடிக்க வேண்டும் எனக் கோவை மகளிர் நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளார். மேலும், சிபிஐ அதிகாரிகளுக்கு உதவுவதற்காக, சிபிசிஐடி எஸ்.பி முத்தரசியை நியமித்துள்ளார். 


ஏற்கனவே 8 பெண்கள் புகாரளித்துள்ள நிலையில், மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வந்து புகார் அளிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகக் காவல்துறை தரப்பில் இருந்து கூறப்பட்டுள்ளது.