சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த வாரம் ஒரு தீர்ப்பு கவனம் பெற்றது. போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட அவர் தான் கொண்டு சென்ற பொருள் ஹெராயின் என்பது தனக்குத் தெரியாது அது கோதுமை அல்லது புளி என்றேதான் நினைத்து எடுத்துச்சென்றதாகக் கூறினார். இதனையடுத்து நீதிமன்றம் அந்த நபரை விடுவித்துள்ளது.
முன்னதாக விசாரணை நீதிமன்றம் அந்த நபருக்கு 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை மற்றும் ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது. அந்த நபர் சென்னையில் இருந்து குவைத்துக்கு ரூ.1.377 கிலோ ஹெராயின் கடத்த முயன்றதாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு தண்டனை விதிக்கப்பட்டது. இச்சம்பவம் செப்டம்பர் 2014ல் நடந்தது.
இந்நிலையில் இந்த வழக்கில் தான் உயர்நீதிமன்றம் இப்போது அந்த நபரை விடுவித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணமாக இருந்தது அந்த நபர் கூறிய வார்த்தைகள். அவர் தனது நண்பர் கொடுத்த பார்சலை எடுத்துச் செல்லவே அஞ்சியதாகக் கூறினார். ஏனெனில் அதுதான் அவரது முதல் வெளிநாட்டுப் பயணம். வெங்கடேஸ்வர ராவ் பார்சலை கொடுத்தபோது அதில் கோதுமையும், புளியும் இருப்பதாகக் கூறியுள்ளார். மேலும் அந்தப் பார்சலைக் கொடுத்த நபருக்கும் வெங்கடேஸ்வர ராவுக்கும் நடந்த உரையாடல் அனைத்துமே வெங்கடேஸ்வர ராவின் அறியாமையை நிரூபிக்கும் வண்ணமே இருந்துள்ளது. முன்னதாக என்சிபி ( Narcotic Control Bureau ), போதை தடுப்புக் குழுவானது, அனதம் குண்ட்லுரு, தெரிந்தே ஒன்றரை கிலோ ஹெராயினை கொண்டு சென்றார். அதனை சென்னை விமான நிலையத்தில் சோதனை செய்தபோது அது அனைத்துமே தடை செய்யப்பட்ட சைக்கோட்ராபிக் சப்ஸ்டன்ஸ் என்பது நிரூபணமானது என்று தெரிவித்திருந்தது. இதன் அடிப்படையிலேயே அவருக்கு விசாரணை நீதிமன்றம் 10 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.1 லட்சம் அபராதமும் விதித்திருந்தது.
செப்டம்பர் 2014ல் குண்ட்லுருவை சென்னை விமான நிலையத்தில் என்சிபி அதிகாரிகள் கைது செய்தனர். சென்னை என்சிபி அலுவலகத்திற்கு ஆந்திர மாநிலம் சித்தூரைச் சேர்ந்த வெங்கடேஸ்வர ராவ் சென்னை விமான நிலையம் வழியாக குவைத்துக்கு ஒன்றரை கிலோ போதைப் பொருள் கடத்துவதாகவும் அதில் ஒரு பாக்கெட் மெட்டாம்ஃபெடமைன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. வெங்கடேஸ்வர ராவின் ஃபோன் காலை போலீஸார் ட்ரேஸ் செய்தபோது அவர் குண்ட்லூருவிடம் அடிக்கடி பேசியது தெரிந்தது. அதனை வைத்தே போலீஸா விமான நிலையத்தில் அவரை கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்த குண்ட்லுரு, எனக்கு மட்டும் அது போதைப் பொருள் என்று தெரிந்திருந்தால் நான் போலீஸார் சோதனை போடும்போது எல்லா பைகளையும் நானாகவே எடுத்துக் காட்டியிருப்பேனா என்று வினவினார். மேலும் வெங்கடேஸ்வர ராவ் ஆரம்பித்தில் இருந்தே ஹெராயினை கோதுமை மாவு, புளி என்றே கூறியுள்ளார். குண்ட்லுருவும் கோதுமை மாவு, புளி என்றே நினைத்துப் பேசியுள்ளார். ஆனால், சதி அவருக்கு தெரிந்திருக்கவில்லை. நீதிமன்றம் குண்ட்லுருவின் அறியாமையை உணர்ந்து அவரை விடுவித்துள்ளது.
ஆனால், 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் தண்டனையை குண்ட்லுரு அனுபவித்துவிட்டார். ஆயிரம் குற்றவாளிகள் தப்பினாலும் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக் கூடாது என்று கூறுவார்கள். ஆனால் ஒரு நிரபராதி 8 ஆண்டுகள் தண்டனை அனுபவித்துள்ளார்.