கடந்த இரண்டரை ஆண்டுகளாக, கொரோனா பாதிப்பு உலகை அச்சுறுத்து வருகிறது. முதல் அலை, இரண்டாம் அலை என மக்களை இன்னலுக்கு உள்ளாக்கி வருகிறது. பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. டெல்டா, ஒமைக்ரான் என மருத்துவ உலகுக்கு சவால் விடுத்து வருகிறது.
இதனிடையே, இந்தியாவில் கொரோனா தினசரி பாதிப்பு நேற்று 13,313 ஆக இருந்தது. இதையடுத்து, இன்று 17 ஆயிரத்தை தாண்டியது. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17,336 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 124 நாட்களுக்கு பிறகு முதல்முறையாக தினசரி பாதிப்பு 17 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. மகாராஷ்டிரா மாநிலத்தில் புதிதாக 5,218 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டது. அங்கு பிப்ரவரி 11ஆண் தேதிக்கு பிறகு தற்போது தினசரி பாதிப்பு மீண்டும் 5 ஆயிரத்தை கடந்துள்ளது.
கேரளாவில் புதிதாக 3,890 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 1,934 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. இது கடந்த பிப்ரவரி 4ஆம் தேதிக்கு பிறகு டெல்லியில் ஒரு நாள் பாதிப்பில் அதிகம் ஆகும்.
தமிழ்நாட்டில் புதிதாக 1,063 பேர், அரியானாவில் 872 பேர், கர்நாடகாவில் 858 பேர், மேற்கு வங்கத்தில் 745 பேர், உத்தர பிரதேசத்தில் 634 பேர், தெலுங்கானாவில் 494 பேர், குஜராத்தில் 416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 33 லட்சத்து 62 ஆயிரத்து 294 ஆக உயர்ந்துள்ளது.
தொற்று பாதிப்பிலிருந்து 13,029 பேர் மீண்டுள்ளனர். இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 49 ஆயிரத்து 56 ஆக உயர்ந்தது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், "கொரோனா அதிகரித்தாலும் தமிழ்நாட்டில் தற்போதைக்கு புதிய கட்டுப்பாடுகள் இல்லை.
கொரோனாவால் உயிர் பாதிப்பு குறைவாகவே உள்ளது. மக்கள் எச்சரிக்கையாக இருத்தாலே போதும். குழந்தைகளை பள்ளிகளுக்கு அனுப்பும்போது கொரோனா அறிகுறி இருக்கிறதா என கண்காணிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல், தொண்டை எரிச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகவும்" என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்