புதுச்சேரி: பாகூர் அருகே கரும்பு தோட்டத்தில் மது பாட்டிலால் பைனான்சியர் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுதொடர்பாக குற்றவாளிகளை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியை சேர்ந்தவர் முருகவேல். இவரது மகன் செந்தில்குமார் (வயது 40). பைனான்ஸ் தொழில் செய்து வந்தார். செந்தில்குமாருக்கு ஜெயலட்சுமி என்ற மனைவியும், 2 பிள்ளைகளும் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு செந்தில்குமார் கடலூரில் வாடகை வீட்டில் குடும்பத்துடன் குடியேறினார்.


இந்தநிலையில் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் செந்தில்குமார் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன்பிறகு அவர் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த அவரது மனைவி, செந்தில்குமாரின் செல்போனுக்கு தொடர்பு கொள்ள முயன்றார். ஆனால் செல்போன் தொடர்பு கிடைக்கவில்லை எனத் தெரிகிறது.


புதுவை மாநிலம் பாகூர் அடுத்துள்ள சோரியாங்குப்பத்துக்கு செந்தில்குமார் மதுகுடிக்க செல்வது வழக்கம் என்பதால், அவரது உறவினர்கள் சோரியாங்குப்பம் பகுதிக்கு சென்று தேடினர். அப்போது சோரியாங்குப்பம் சாலை குருவிநத்தம் பகுதியில் செந்தில்குமாரின் மோட்டார் சைக்கிள் தனியாக நின்றது. இதைப்பார்த்ததும் அவரது உறவினர்கள் அருகில் உள்ள கரும்பு தோட்டத்தில் தேடியதில் செந்தில்குமார் ரத்தவெள்ளத்தில் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.




இதுகுறித்து தகவல் அறிந்த சீனியர் போலீஸ் சூப்பிரண்டு தீபிகா, போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், பாகூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் நந்தகுமார், விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு ரத்த வெள்ளத்தில் கிடந்த செந்தில்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், அங்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து ஓடி சோரியாங்குப்பத்தில் உள்ள தனியார் மது பாரில் சென்று நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.




இந்த படுகொலை தொடர்பாக பாகூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில் செந்தில்குமாரை கரும்பு தோட்டத்தில் வைத்து மர்மநபர்கள் மதுபாட்டிலால் அடித்துக் கொலை செய்தது தெரியவந்துள்ளது. எனவே தொழில் போட்டி காரணமாக அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மது பாட்டிலால் அடித்து பைனான்சியரை கொலை செய்த மர்ம ஆசாமிகளை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர