தமிழ்நாட்டின் 17வது பறவைகள் சரணாலயம் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சராயன் ஏரியில் அமையவுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், “தமிழகத்தின் 17வது பறவைகள் சரணாலயத்தை திருப்பூர் மாவட்டத்தில் உள்ள நஞ்சராயன் ஏரியில் அமையும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். இதன் மூலம் மாநிலம் முழுவதும் உள்ள பறவை ஆர்வலர்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது” என பதிவிட்டுள்ளார். 






நஞ்சராயன் குளம் :


திருப்பூர் - ஊத்துக்குளி சாலையில் சர்க்கார் பெரியபாளையம் என்னும் இடத்தில் சுமார் 440 ஏக்கர் நிலப்பரப்பளவில் அமைந்துள்ளது நஞ்சராயன் குளம். இந்த குளமானது கடந்த 1498 ம் ஆண்டு வெட்டப்பட்டு மிக நீண்ட காலமாக அப்பகுதி மக்களால் பாதுகாக்கப்படுகிறது. மிக நீண்ட வரலாறு மற்றும் தொன்மை கொண்டது. 


இந்த நஞ்சராயன் குளத்தில் எப்போதும் நீர் மற்றும் சீதோஷ்ண நிலை காரணமாக பறவைகள் வந்து செல்வதுமாக இருந்து வருகிறது. இதனால் அந்த ஏரியில் ரஷ்யா, ஐரோப்பா, சைபீரியா போன்ற வெளிநாடுகளில் இருந்து கிரீன் ஹெரான், கிரேவாக் டெய்லர், சேண்ட் பைபர் உள்ளிட்ட பறவைகள் வருடந்தோறும் வருகின்றனர். 






இதையடுத்து கடந்த 2009 ம் ஆண்டு பறவைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் இந்த நஞ்சராயன் ஏரியை பறவைகள் சரணாலயம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். கிட்டத்தட்ட 13 ஆண்டுகளுக்கு பிறகு கடந்த ஏப்ரல் மாதத்தில் 17வது பறவைகள் சரணாலயமாக நஞ்சராயன் ஏரி அமைக்கப்படும் என்றும் சரணலாய பணிகளுக்காக ரூ. 7.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படும் என்றும் வனத்துறை அமைச்சர் அறிவித்தார். 


அந்த அறிவிப்பின்படி, இன்று தமிழ்நாடு முதலமைச்சர் முக ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழ்நாட்டில் 17வது பறவைகள் சரணாலயமாக நஞ்சராயன் சரணாலயம் அமைக்கப்படும் என தெரிவித்தார்.