தென்கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் தமிழ்நாட்டில் வருகிற 11 ஆம் தேதி முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்.
ஃபெஞ்சல் புயல்:
தமிழகத்தில் கடந்த வாரம் நிலவிய ஃபெஞ்சல் புயல் காரணமாக பல்வேறு இடங்களில் கனமழையானது வெளுத்து வாங்கியது. குறிப்பாக விழுப்புரம் மாவட்டத்தில் வரலாறு காணாத கனமழை பெய்தது. இது மட்டுமில்லாமல் விழுப்புரத்தின் அண்டை மாநிலங்களான கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழையால் பல்வேறு இடங்கள் வெள்ளகாடானது. இதன் சுவடுகளே மறையாத நிலையில் வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி:
இந்த நிலையில் இன்று காலை 08.30 மணி அளவில் தென் கிழக்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த பகுதி உருவானதாக சென்னை வானிலை மையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வானிலை மையம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இது, மேலும் நகர்ந்து தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறும் என்று வானிலை மையம் கணித்தது.
இந்த நிலையில் தான் இன்று காலை 08.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது வரும் 12ஆம் தேதி வியாழக்கிழமை அன்று இலங்கை-தமிழ்நாடு கடற்கரையை நோக்கி நகரும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
கனமழை வாய்ப்பு:
இதனால், வரும் 11ஆம் தேதி மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதேபோன்று, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மற்றும் காரைக்காலிலும் புதன் மற்றும் வியாழக்கிழமை கனமழை பெய்யக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை வானம் மூட்டத்துடன் காணப்படும் என்று அதிகாலை வேளையில் பனி மூட்டம் காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.