மாமிசம் உண்டால் அந்த மிருகங்களின் குணங்கள் மனிதருக்கு வரும் என, லொள்ளு சபா புகழ் ஜீவா கூறியது உண்மையா? அறிவியல் சொல்வது என்ன என்பதை இந்த தொகுப்பில் அறியலாம்.


லொள்ளு சபா ஜீவா:


ஜீவா என்றால் பொதுமக்கள் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், லொள்ளு சபா ஜீவா என்றால் அடடே ஆமாம்பா, ரஜினி போலவே செய்வாரே அவரா என கேட்கும் அளவிற்கு சின்னத்திரை மூலம் பிரபலமானவர் தான் இவர். சில சினிமாக்களிலும் நடித்துள்ளார். திரை நட்சத்திரமாக மட்டுமின்றி, தமிழருவி மணியன் தலைமையிலான காமராஜர் மக்கள் கட்சியில் இளைஞரணி தலைவராகவும் ஜீவா செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் தான், மாமிசம் தொடர்பாக அவர் பேசிய கருத்து சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாகியுள்ளது.


மாமிசம் பற்றி ஜீவா சொன்னது என்ன? 


தனியார் தொலைக்காட்சியில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சி ஒன்றில் ஜீவா பங்கேற்று பேசினார். அப்போது, “மாமிசம் எந்த அளவிற்கு நாம் உட்கொள்கிறோமோ, எந்த மிருகத்தை நாம் உண்கிறோமோ, அதாவது கோழியோ, ஆடோ, மாடோ எதை நாம் உண்கிறோமோ அந்த உயிரினங்களின் பண்புகள் நமக்குள் வரும். அவற்றின் தன்மை நம்முள் எழும். இதை மறுக்கவே முடியாது” என பேசியிருந்தார். இதைகேட்ட சுற்றி இருந்த சிலர் ஜீவாவின் கருத்தை கைதட்டி வரவேற்றனர்.


என்ன சார் பண்ணி வெச்சிருக்கீங்க?


லட்க்கணக்கானோர் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியில் அமர்ந்துகொண்டு ஒரு கருத்தை தெரிவிக்கும்போது, அது இந்த சமூகத்தில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும், நாம் சொல்வதில் எந்த அளவிற்கு உண்மை உள்ளது என்று சற்றேனும் யோசித்து பார்த்து இருந்தால் ஜீவா இப்படி பேசியிருப்பாரா என்பது சந்தேகமே! கோழி, ஆடு மற்றும் மாடு ஆகியவற்றை உண்பவர்களுக்கு, அந்த உயிரினங்களின் பண்புகள் எழும் என்பது உண்மை என்றால்.. கீரை, காய்கறிகளை உண்பவர்கள் என்ன வாயற்று போய்விடுவார்களா. கை, கால்கள் அற்று முடமாகிவிடுவார்களா என்று தான் கேட்க தோன்றுகிறது.


ஒருவேளை இப்படி இருக்குமோ?


ஜீவா சொல்வதை போன்று மிருகங்களின் மாமிசங்கள் அவற்றின் பண்புகளை மனிதருக்கு வழங்கும் என எடுத்துக்கொள்வோம். எனில், உலகின் வேகமான மனிதரான உசைன் போல்ட் வேகமான உயிரினமான சிறுத்தையை கொன்று தின்று இருப்பாரா? இல்லை செய்தியாளர்களை கண்டுகொள்ளாமலேயே இருக்கும் சில தலைவர்கள், கண்களும், செவிகளும் அற்ற மிருகங்களின் மாமிசங்களை ஏதேனும் தின்று இருப்பார்களோ என்ற கேள்வியை எழுப்புகிறது.  அதேநேரம், பசு மற்றும் ஆடு போன்றவற்றின் பாலை குடிப்பவர்களுக்கு என்ன மாதிரியான பண்புகள் வரும் என்ற சந்தேகம் எழுவதையும் தடுக்க முடியவில்லை.


அறிவியல் சொல்வது என்ன?


மாமிசம் உண்பதால் ஒருவரின் பண்புகள் மாற்றமடைகின்றன, மிருகங்களின் குணங்கள் மனிதர்களுக்கு தொற்றிக்கொள்கின்றன என்பதற்கு இதுவரையிலும் எந்தவித அதிகாரப்பூர்வ அறிவியல் தீர்வுகளும் இல்லை என்பதே உண்மை. கூகுளில் தேடிப்பார்த்தாலே இதை அனைவரும் எளிதாக அறிந்துகொள்ளலாம். ஆனால், இதையெல்லாம் சற்றும் பொருட்படுத்தாமல் காலம் காலமாக மாமிசம் உண்பவர்கள் முரட்டுத்தனமானவர்கள் என்ற பிம்பமும், மாமிசம் உண்ணாதவர்கள் மென்மையானவர்கள் என்றும் காலம் காலமாக ஒரு கட்டுக்கதை பரவி வருகிறது.


சாதிய பாகுபாடு:


இந்த பாகுபாடு என்பது சாதிய அடிப்படையில் நிர்ணயிக்கப்படுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. அந்த கருத்தை தான் ஜீவாவும் பிரதிபலித்துள்ளார். ஆனால், காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சே, ஒரு பெரும் இனப்படுகொலைக்கே காரணமான ஹிட்லர் ஆகியோரும் மாமிசம் உட்கொள்ளாதவர்கள் தான். எனில் எதற்காக இப்படி ஒரு பொய்யான பிம்பம் ஏற்படுத்தப்படுகிறது? வேறு ஒன்றும் இல்லை. என்றும் ஒருதரப்பு மக்கள் நமக்கு கீழானவர்கள் தான், நாம் மட்டுமே தூய்மையானவர்கள், நல்லவர்கள் என மற்றொரு தரப்பினர் காட்டிக்கொள்ள முயல்வதன் விளைவு தான் இது.


சாதிப்பது என்ன?


உதாரணமாக அலுவலகத்திலோ அல்லது பொதுவெளியிலோ ஒரு குழுவாக உணவு உண்பதாக எடுத்துக்கொள்வோம். அங்கு அனைவரும் மாமிசம் சாப்பிடும்போது ஒருவர் மட்டும், சைவ உணவை சாப்பிட்டாலும் அவர் எந்த தாழ்வு மனப்பான்மையயும் உணர்வதில்லை. அதேநேரம், அனைவரும் சைவ உணவு சாப்பிடும் இடத்தில், ஒருவர் மட்டும் அசைவ உணவு சாப்பிட்ட முயன்றால் அங்கு அவர் வித்தியாசமான சூழலை தான் எதிர்கொள்கிறார்.  “உங்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லையே” என அனுமதி பெற்று தான் சாப்பிட வேண்டியுள்ளது. இதன் மூலம் அடிப்படையிலேயே சாதிய ஏற்றத்தழ்வுகளை, உளவியல் ரிதியாக மக்களின் மனதில் இவர்கள் விதைக்க முயற்சிக்கின்றனர்.   


இதுவும் வன்முறைதான்..!


சைவம் சாப்பிடுபவர்கள் அனைவரும் மென்மையானவர்கள், நன்கு கற்று தேர்ந்தவர்கள், சிறந்த முடிவுகளை எடுக்கக் கூடியவர்கள், மேன்மையானவர்கள் மற்றும் நல்லவர்கள் எனவும்,  அதேநேரம் அசைவம் சாப்பிடுபவர்கள் முரட்டுத்தனமானவர்கள், சிலருக்கு கீழ் படிய வேண்டியவர்கள், பிறரை சார்ந்து இருக்க வேண்டியவர்கள் தான் என்றும் உளவியல் ரீதியாக விதைக்க பார்க்கின்றனர். சதையை கிழித்து ரத்தத்தை பார்ப்பது மட்டும் வன்முறை அல்ல, மனரீதியாக தன்னை தானே கீழானவராக உணரச் செய்வதும் வன்முறை தான்.