கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே எஸ். ஏரிப்பாளையம் கிராம மக்கள் நாடாளுமன்ற தேர்தலை புறக்கணிப்பதாக கூறி வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டனர்.


கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஒன்றியம் எஸ். ஏரிப்பாளையம் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் 1800க்கும் மேற்பட்ட வாக்குகள் உள்ளன. இக்கிராமம் சிறுவத்தூர் மற்றும் சேமகோட்டை ஆகிய ஊராட்சிகளில் உள்ளது. இதன் காரணமாக தங்கள் கிராமத்திற்கு எந்தவித அடிப்படை வசதிகளும், அரசின் நலதிட்டங்களும் கிடைக்கவில்லை என்று கிராம மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால் எஸ்.ஏரிப்பாளையத்தை தனி ஊராட்சியாக அறிவிக்க கோரி பல ஆண்டுகளாக இக்கிராம மக்கள் வலியுறுத்தி வந்தனர். 




இந்த நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில் எஸ். ஏரிப்பாளையத்தில் பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டி எதிர்ப்பை காட்டி வருகின்றனர்.


அடிப்படை தேவைகளில் கூட தங்கள் கிராமம் புறக்கணிக்கப்படுவதாக தொடர்ந்து பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வரும் இவர்கள் கடந்த ஜனவரி மாதம் மக்களவைத் தேர்தலை புறக்கணிப்பதாக கூறி பேனர் ஒட்டி உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் இதுவரையிலும் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் இவர்கள் தெரிவித்துள்ளனர்.




நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இந்த பகுதியில் கடந்த இரண்டு முறை திமுகவைச் சேர்ந்த சபா ராஜேந்திரன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அவர் இந்த கிராமத்தை தனி ஊராட்சியாக மாற்றி தருவேன் என வாக்குறுதி அளித்ததன் அடிப்படையில் நாங்கள் கடந்த முறை அவருக்கு வாக்களித்து அவரை வெற்றி பெற செய்தோம் என்றும் ஆனால் தேர்தலில் வெற்றி பெற்று அவர் இந்த கிராமத்தின் பக்கம் வரவே இல்லை என்றும் அவர்கள் குற்றம் சாட்டினர்.


மேலும், தனி ஊராட்சியாக அறிவிக்கும் வரை தங்களது போராட்டம் தொடரும் என்றும், எங்கள் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை எனில் அரசின் மூலம் வழங்கப்பட்ட அனைத்து அடையாள அட்டைகளையும் ஒப்படைக்க உள்ளதாகவும் கிராம மக்கள் தெரிவித்துள்ளனர்.