Lok sabha Election - Rules Violation : நாடாளுமன்ற தேர்தல் அடுத்த மாதம் தொடங்கி நடைபெற இருக்கும் நிலையில் அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தேர்தல் ஆணையம் சனிக்கிழமை அறிவித்தது. தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. தேர்தல் ஆணையமும் அதற்கான பணிகளை மேற்கொண்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதில் இருந்து தேர்தல் விதிகள் அமலுக்கு வந்துள்ளது. பறக்கும் படை மூலமும், சோதனை சாவடிகள் மூலமும் தீவிர சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
குறிப்பாக பணப்பட்டுவாடா, பரிசுப் பொருட்கள் வழங்குவதை தடுக்க தீவிர சோதனை மேற்கொண்டுள்ளனர். இதில் நேற்று காலை 9 மணி வரை சுமார் 3.5 கோடி மதிப்பிலான ரொக்கப்பணமும் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்ட செய்தி குறிப்பீட்டில், “ நேற்று காலை 9 மணி வரை ரூ. 2.81 கோடி மதிப்பிலான ரொக்கப் பணம், ரூ. 0.26 கோடி மதுபான பொருட்கள், ரூ.020 கோடி மதிப்பிலான போதைப் பொருட்கள், ரூ.0.18 கோடி மதிப்பிலான விலை உயர்ந்த பொருட்கள் என மொத்த ரூ. 3.50 கோடி மதிப்பிலான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவற்றை தவிர வாக்காளர்கள் பணப்பட்டுவாடா அல்லது பரிசு பொருட்கள் வழங்குவது தொடர்பாக புகார் அளிக்க வேண்டும் என்றால் சென்னை தலைமை செயலகத்தில் இருக்கும் நாமக்கல் கவிஞர் மாளிகையில் 4வது தளத்தில் மாநில அளவிலான வாக்காளர் குறைத்தீர்ப்பு முகாம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் இலவச எண் 1800-4252-1950 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு மக்கள் புகார் அளிக்கலாம். அல்லது ஏதேனும் தகவல் வேண்டும் என்றாலும் இந்த எண்ணை தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம். தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில் தேர்தல் ஆணையமும் வாக்குச் சாவடிகள் அமைப்பது, பதற்றமான வாக்குச்சாவடி எது என்பது தொடர்பான பணிகளை மேற்கொண்டு வருகிறது.