மக்களவை தேர்தலில் அதிமுக முதல் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிட்ட நிலையில் இன்று இரண்டாம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
மக்களவை தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கும் நிலையில் கட்சிகள் தரப்பில் வேட்பாளர் பட்டியல், கூட்டணி உடன்படிக்கை, தேர்தல் அறிக்கை ஆகியவை வெளியிடப்பட்டு வருகிறது. இதுபோக தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகளை மும்மரமாக செயல்படுத்தி வருகிறது. அதிமுக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியிட இருந்த நிலையில் நேற்று யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் முதல் கட்ட வேட்பாளர் பட்டியலை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். முதல் கட்டமாக 16 வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர்.
முதல் கட்ட வேட்பாளர் பட்டியல்:
- வடசென்னை - இராயபுரம் மனோ
- தென் சென்னை - ஜெயவர்தன்
- காஞ்சிபுரம் - ராஜசேகர்
- அரக்கோணம் - விஜயன்
- விழுப்புரம் - பாக்கியராஜ்
- சிதம்பரம் - சந்திரஹாசன்
- நாமக்கல் - தமிழ்மணி
- கரூர் - கே.ஆர்.என். தங்கவேல்
- சேலம் - விக்னேஷ்
- மதுரை - சரவணன்
- தேனி - நாராயணசாமி
- கிருஷ்ணகிரி - ஜெயபிரகாஷ்
- ஆரணி - கஜேந்திரன்
- நாகப்பட்டிணம் - சுர்ஜித் சங்கர்
- ஈரோடு - ஆற்றல் அசோக்குமார்
- இராமநாதபுரம் - ஜெயபெருமாள்
வேட்பாளர்கள் பட்டியல் மட்டுமல்லாமல் கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படும் எனபது குறித்தும் அறிவிப்பு வெளியானது. அதில் தேமுதிகவிற்கு 5 இடங்கள், எஸ்டிபிஐ மற்றும் புதிய தமிழகம் ஆகிய கட்சிக்கு தலா 1 தொகுதிகளும் ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் அதிமுக தலைமையில் பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், புதிய நீதிக் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ், என்.ஆர்.காங்கிரஸ் கட்சிகள் இடம் பெற்றது. ஆனால் இம்முறை இந்த கூட்டணி பிரிந்துள்ளது. இதில் பாஜக தலைமையிலாக கூட்டணியில் பாமக, தமாக, என்.ஆர்.காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று அதிமுக தரப்பில் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. 16 வேட்பாளர்களை வெளியிட்ட அதிமுக இன்று மீதமுள்ள 17 வேட்பாளர்களை அறிவிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 33 தொகுதிகளில் போட்டியிடுகிறது அதிமுக. மொத்தம் 40 தொகுதிகளில் 33 தொகுதிகளில் அதிமுகவும் பிற இடங்களில் கூட்டணி கட்சிகளும் போட்டியிடுகிறது. நேற்று மாலை தேமுதிக மற்றும் அதிமுக கட்சிகள் இடையே தொகுதி பங்கீடு மற்றும் கூட்டணி உடன்படிக்கை கையெழுத்தானது. அதிமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முழுமையடைந்ததை ஒட்டி 33 தொகுதிகளில் அதிமுக போட்டியிடுகிறது.