மக்களவை தேர்தலில், பாஜக கூட்டணியில் உள்ள அமமுகவிற்கு குக்கர் சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
18வது மக்களவைக்கான தேர்தலானது வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இந்நிலையில், இன்று மக்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
இந்திய அளவில் உள்ள பல்வேறு கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள பாஜக கூட்டணியில் கட்சிகளுக்கு இடையில் இன்று சென்னையில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதில் அமுமக கட்சிக்கு 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஆனால், எந்த தொகுதிகள் என்பதை டிடிவி தினகரன் தெரிவிக்கவில்லை, தேனியில் போட்டியிட தொண்டர்கள் விரும்புவதாக தெரிவித்தார். மேலும் சின்னம் குறித்து தெரிவிக்கையில் குக்கர் சின்னத்திற்கு விண்ணப்பித்துள்ளோம் என தெரிவித்தார்.
இதையடுத்து, இன்று இரவு குக்கர் சின்னம் அமமுக கட்சிக்கு கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது. ஆகையால் 2 தொகுதிகளிலும் அமமுக குக்கர் சின்னத்தில் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், வரும் 24 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். முதல் பகுதியாக வரும் 24 ஆம் தேதி தேனி மாவட்டத்தில் பரப்புரை மேற்கொள்கிறார்.