அதிமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை திமுக கொண்டு வந்தது போல் பேசி வருகின்றனர் என முன்னாள் போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் பேசினார்.


 




 


கரூர் நாடாளுமன்ற தொகுதி தேர்தல் முன்னிட்டு அதிமுக  சார்பில் போட்டியிடும் தங்கவேலுக்கு அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கா பரமத்தி கடைவீதி பகுதியில் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார். இதில் கலந்து கொண்டு பேசிய முன்னாள் போக்குவரத்துறை அமைச்சரும் கரூர் மாவட்ட செயலாளருமான எம்.ஆர்.விஜயபாஸ்கர் பேசுகையில், “கடந்த அதிமுக ஆட்சியில் அரவக்குறிச்சி பொதுமக்களுக்கு குடிநீர் தேவைகளுக்காக 350 கோடி ரூபாய் மதிப்பீட்டில் திட்டங்களை கொண்டு வந்தோம். அதேபோன்று புகலூர் பகுதியில் 450 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கதவனை திட்டத்தை கொண்டு வந்ததும் அதிமுக ஆட்சியில். ஆனால், திமுகவினர் நாங்கள் கொண்டு வந்தோம் என கூறி வருகின்றனர்.


 


 




 


மகளிர் உரிமைத் தொகை ஒரு கோடியே 6 லட்சம் பேருக்கு கொடுத்துவிட்டு ஒன்னேகால் கோடி பேருக்கு மகளிர் உரிமைத்தொகை வரவில்லை. திமுக ஆட்சி அமைந்த உடன் அனைவருக்கும் மகளிர் உரிமை தொகையை வழங்கப்படும் என கூறிய நிலையில் இதுவரை பாதி பேருக்கு வழங்கவில்லை. ஆட்சிக்கு வந்து மூன்று ஆண்டு ஆகியும் இந்த திமுக அரசு இதுவரை மகளிர் உரிமைத் தொகை முழுமையாக வழங்கப்படவில்லை” என குற்றம் சாட்டினார்.


தொடர்ந்து பேசியவர், “எம்பி ஜோதிமணி ஐந்து ஆண்டுகளில் பொது மக்களை கூட சந்திக்க வராதவர்களுக்கு எதற்கு நாங்கள் வாக்களிக்க வேண்டும் என பொதுமக்கள் கேட்க வேண்டும். அதிமுகவுக்கு வாக்களித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வேட்பாளர் தங்கவேலுவை வெற்றி பெற செய்ய வேண்டும்” என்றார்.