லண்டனில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.22 லட்சம் வாங்கிக் கொண்டு போலியான விசா வழங்கியதாக பெண் மீது பாதிக்கப்பட்ட இளைஞர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ளார்.


 


 




 


கரூர் மாவட்டம், சுக்காலியூரை அடுத்த செட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்தவர் குணால் (வயது 21). இவர் தனியார் கல்லூரியில் பி.காம்., சி.ஏ படித்து விட்டு ஆங்கிலம் கற்பதற்காக நாமக்கல்லில் உள்ள தனியார் பயிற்சி மையத்தில் கடந்த 1 ஆண்டுக்கு முன்பு ஸ்போக்கன் இங்கிலீஸ் படித்து வந்துள்ளார். லண்டனில் வேலை பார்க்கும் குணாலின் நண்பர் ஒருவரை தொடர்பு கொண்ட கரூர், வெங்கமேட்டை சேர்ந்த நித்யா என்ற பெண் வெளிநாடுகளில் வேலை வாங்கி கொடுப்பதாக கூறி தொடர்பு கொண்டுள்ளார். அந்த பெண்ணிடம் தன்னுடைய நண்பன் குணால் வெளிநாடு வேலைக்கு முயற்சி செய்து வருவதாகவும் அவரை தொடர்பு கொள்ளும்படி கூறியுள்ளார்.  அதன்படி நித்யா, குணாலை தொடர்பு கொண்டு லண்டனில் கேர் ஹோம் பணி தயாராக இருப்பதாகவும், அதற்கு 22 லட்சம் ரூபாய் செலவாகும் என கூறியுள்ளார். இதனை நம்பி குணால், தனது வீட்டில் எடுத்துக்கூறி வீட்டில் இருந்த நகைககள், நிலத்தை அடமானம்  வைத்து அதில் வந்த பணத்தை கொண்டு 4 கட்டமாக 22 லட்ச ரூபாயை நித்யாவின் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளார். 


 




 


இந்நிலையில் விசா, வொர்க் பர்மிட் எல்லாம் வந்து விட்டதாக, வெங்கமேட்டில் உள்ள தனது வீட்டில் வந்து வாங்கிக் கொள்ளுமாறு கூறி குணாலிடம் அதனை கொடுத்துள்ளார். இதனை நம்பி குணால் வெளிநாடு செல்வதற்காக, கடந்த ஆண்டு டிசம்பர் 15ம் தேதி பெங்களூர் சர்வதேச விமான நிலையத்திற்கு சென்றுள்ளார். அங்கு அவர் கொண்டு வந்த ஆவணங்களை பரிசோதித்த விமான நிலைய அதிகாரிகள் அந்த ஆவணங்கள் போலியானவை என்று கூறி திருப்பி அனுப்பி வைத்ததாக சொல்லப்படுகிறது. 


 


 




 


இதனை தொடர்ந்து வீடு திரும்பிய குணால், நித்யாவை செல்போனில் தொடர்பு கொண்ட போது, தொடர்பு கொள்ள முடியவில்லை அவருடைய வீட்டில் சென்று கேட்ட போது, அந்த வீடு வாடகை வீடு என்றும், அதனை அவர் காலி செய்து விட்டுச் சென்று விட்டதாக சொல்லப்படுகிறது. மேலும், நன்னியூர் புதூரில் உள்ள அவரது அம்மா, அப்பாவை நேரில் சந்தித்து கேட்டபோது உங்களிடம் பணம் வாங்கியது என் மகள் தான், அவரிடம் வாங்கிக் கொள்ளுங்கள் என்று கூறி திருப்பி அனுப்பி வைத்து விட்டனர்.  மாயமான நித்யாவை கைது செய்து அவரிடமிருந்து தனது 22 லட்சம் ரூபாயை பெற்று தருமாறு ஜனவரி 24ம் தேதி புகார் அளிக்கப்பட்டும் இதுவரை போலீசார் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, மீண்டும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனுவினை அளித்துள்ளார். மாயமான நித்யாவிற்கு திருமணமாகி இரண்டு மகன்கள் இருப்பதாகவும், கணவருடன் அவர் இல்லை என கூறப்படுகிறது.