தருமபுரி மாவட்ட ஆட்சியர் கூடுதல் கூட்டரங்கில் கொரோனா நோய் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டத்தில் எத்தனை சதவீதம் தடுப்பூசிகள் போட்டுள்ளனர், கொரோனா தடுப்ப மையங்கள் எத்தனை உள்ளது, கொரோனா தொற்றை கட்டுபடுத்த எந்த மாதிரியான நடவடிக்கைகள் எடுக்கபட்டுள்ளது என கேட்டறிந்தார். மேலும் தருமபுரி மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதோடு மருத்துவமனைகளில் பொது மக்கள் அனைவருக்கும் பரிசோதனைகள் செய்ய வேண்டும் என கூறினார்.
இதனைத் தொடர்ந்து தருமபுரி நகர, சந்தைப்பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் முன்கள பணியாளர்கள், இணை நோய் உள்ளவர்கள், 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கூடுதல் தடுப்பூசி செலுத்தும் முகாமினை தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார். இதனையடுத்து செட்டிக்கரை அரசு பொறியியல் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை மையத்தினை அமைச்சர் பன்னீர்செல்வம், பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்,
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வருகிறது. இதனால் பொதுமக்கள் கூட்டம் கூடுவது தவிர்க்க வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் இரண்டு தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே வெளி வர வேண்டும் என அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்து வருகிறார்கள். கொரோனா பரவுவதை தடுக்க நடவடிக்கையை முதலமைச்சர் தீவிரமாக கவனித்து வருகிறார். இதனை அந்ததந்த பகுதியில் உள்ள அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆகவே முழு ஊரடங்கை சந்திக்க கூடிய ஒரு நிலைமை எழாது என்று, நாம் எல்லோரும் ஒத்துழைக்க வேண்டும். இதனால் பொதுமக்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு கொடுத்தால், பொதுமுடக்கம் வராமல் தடுக்க முடியும். வள்ளலார் கூற்றுப்படி தனித்திருக்கனும், விழித்திருக்கனும், கொரோனாவை தடுக்கலாம் என அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்தார். இந்த ஆய்வுக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ச.திவ்யதர்சினி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சி.கலைச்செல்வன், கூடுதல் ஆட்சியர் மரு.வைத்திநாதன், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் மரு.மலர்விழி வள்ளல், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.அமுதவல்லி உள்ளிட்ட நகராட்சி, பேரூராட்சியே சேர்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.