கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற உள்ள உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் கள்ளக்குறிச்சியில் தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கலந்து கொண்டு வேட்பாளர்களை அறிமுகம் செய்து வைத்து பேசியதாவது:- தமிழகத்தில் வருகிற 2024 ஆம் ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அதைத் தொடர்ந்து 2026 ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடும். உள்ளாட்சி மட்டுமல்ல எல்லா தேர்தலிலும் நாங்கள் தனித்துதான் போட்டியிடுவோம். 2019 ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 17 லட்சம் வாக்குகளையும், 2021ஆம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் 30 லட்சம் வாக்குகளையும் பெற்றுள்ள நாம் தமிழர் கட்சியை பார்த்து திராவிட கட்சிகள் பயப்படுகின்றன.




பொழுதுபோக்கு, கேளிக்கைகளில் அதிக நேரம் செலவிடும் ஒரே இனம் தமிழினம் தான். சீனா, ரஷ்யா, அமெரிக்கா, ஜப்பான் ஆகிய நாடுகளில் கிரிக்கெட் இல்லை. ஆனால் இந்த நாடுகள் விளையாட்டு போட்டியில் சிறந்து விளங்குகின்றன. வேளாண்மையை கைவிட்ட நாடு பிச்சை எடுக்கும் சூழ்நிலை உருவாகும். நாம் தமிழர் கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்பை அரசு பணியாக்குவோம். மண்பாண்ட தொழிலாளர்களை பேராசிரியர்களாக உருவாக்குவோம். நாட்டில் படிக்காதவர்களே இல்லை என்பது உறுதிபடுத்தப்படும். அரசு பள்ளி மற்றும் மருத்துவமனைகள் தரம் உயர்த்தப்படும். உள்ளாட்சி தேர்தலில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களையும் வெற்றி பெற செய்ய வேண்டும்  என  பேசினார்.



கள்ளக்குறிச்சியில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


மத்திய அரசு அனைத்துத் துறைகளையும் தனியாருக்கு மாற்றி விட்டு எதற்கு ஜி.எஸ்.டி. வரி வசூலிக்க வேண்டும்? வசூலித்த நிதியை மாநிலங்களின் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு வழங்கவில்லை. ஜி.எஸ்.டி.வரி என்பது தமிழக நிதி அமைச்சர் கூறுவது போல் கூட்டாட்சிக்கு எதிரானது. தமிழகத்தில் ஏற்கனவே உள்ள சுங்கச் சாவடிகளால் கொஞ்சம் பேரை தான் சாகடித்து உள்ளனர், கூடுதலாக 6 சுங்கச்சாவடியை அமைத்து இன்னும் கொஞ்சம் பேரை சாகடிக்க உள்ளனர் என்று  கூறினார்.


விழுப்புரத்தில்  நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-


தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் அனைத்து பதவிகளுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பில்  வேட்பு மனு தாக்கல் செய்துள்ளதாகவும் சில இடங்களில் மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் நாங்கள் வெற்றிபெற வேண்டும் என தான் ஒவ்வொரு முறையும் போராடுடி வருவதாகவும் நாங்கள் தொடர்ந்து தேர்தலில் போட்டியிடுவதே வெற்றி தான் என தெரிவித்தார். அதனை தொடர்ந்து பேசிய அவர் லோக் சபா தேர்தலில் 17 லட்சம் ஓட்டுகளும் சட்டசபை தேர்தலில் 30 லட்சம் ஓட்டுகளும், தமிழகத்தின் ஒரு பகுதியில் நடந்த உள்ளாட்சி தேர்தலின்போது, 12 சதவீதம் ஓட்டுகள் பெற்றுள்ளதால் தொடர்ந்து நாம் தமிழர் கட்சி தனித்தே போட்டியிடுவோம் என தெரிவித்தார். தமிழகத்தில்


ஆள் தான் மாறியுள்ளனர் ஆட்சி மாறவில்லை. எடப்பாடி சென்று, ஸ்டாலின் வந்துள்ளார். 202 வாக்குறுதிகள் நிறைவேற்றியுள்ளதாக ஸ்டாலின் கூறுகிறார் ஆனால் பத்தை கூட நிறைவேற்றவில்லை எனவும் மாநில அரசுகளின் தீர்மானங்களை, மத்திய அரசு மதிப்பதில்லை  காவிரி தண்ணீரை வழங்க வேண்டும் என  உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால், தண்ணீர் வழங்கவில்லை. ஏழுபேர் விடுதலைக்கு சட்டம் நிறைவேற்றினால், அதை மத்திய அரசு ஏற்பதில்லை. இதை எதிர்த்து தமிழக ஆட்சியாளர்கள் சண்டை போடுவதில்லை என சீமான் குற்றஞ்சாட்டினார். தி.மு.க.,வினர் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளரை  கடத்தி சென்று வைத்து, வாபஸ் பெற வைக்கின்றனர்.




இது தொடர்பாக புகார் அளித்தால் போலீசாரும் ஆட்சியரும் கண்டுகொள்வதில்லை. தமிழகத்தில் 77 ஆண்டுகள் பழமையான கட்சியான திமுக கோடிக்கணக்கான தொண்டர்கள் வைத்துள்ள நிலையில் தங்களை பார்த்து பயப்படுவதாகவும்,  விவசாயத்திற்கு ஆட்கள் வேலைக்கு வருவதில்லை. அதற்கு ஏன் தனி நிதிநிலை அறிக்கையை திமுக தாக்கல் செய்கிறார்கள் இது மக்களை ஏமாற்றுகிற செயல் என கூறினார். சைவத்தையும், தமிழையும் தான் பிரிக்க முடியாது  இந்துவிற்கும் தமிழிற்கும் எந்த சம்பந்தமும் இல்லாத போது என்னை மலையாளி என கூறி எதாவது பேசவேண்டும் என்பதற்காக ஹெச்.ராஜா பேசுவாதகவும் தன்னுடன் ஹெச்.ராஜா நேருக்கு நேராக விவாதிக்க தயாரா என சீமான் கேட்டுக்கொண்டார்.