விழுப்புரம் : மிட்டாய் கடைகள் போல மதுக்கடைகள் தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ளதாகவும், ஆட்சிக்கு வந்தவுடனே படி படியாக மதுவை குறைப்போம் என கூறிய திமுக அரசு அதனை செய்யவில்லை தீபாவளி பண்டிகையின் போது டாஸ்மாக்கில் விற்பனையான பணத்தை தான் மகளிர் உரிமை தொகை ஆயிரம் ரூபாயாக வழங்கப்படுவதாக பசுமை தாயகம் தலைவர் செளமியா அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். 

மிட்டாய்க் கடைகள் போல டாஸ்மாக்

திமுக அரசு மதுக்கடைகளை மிட்டாய்க் கடைகள் போலத் திறந்து வைத்துள்ளது என்றும், படிப்படியாக மதுவிலக்கைக் குறைப்போம் என்ற வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்றும் பசுமைத் தாயகம் தலைவர் செளமியா அன்புமணி கடுமையாகக் குற்றஞ்சாட்டியுள்ளார்.

பா.ம.க. தலைவர் அன்புமணி இராமதாஸ் மேற்கொண்ட 'தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தைத்' தொடர்ந்து, அவருடைய துணைவியாரும், பா.ம.க.வின் துணை அமைப்பான பசுமைத் தாயகம் அமைப்பின் தலைவருமான செளமியா அன்புமணி தற்போது பெண்களுக்கான உரிமைகளை வலியுறுத்தி 'தமிழக மகளிர் உரிமை மீட்புப் பயணம்' மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக, விழுப்புரம் அருகேயுள்ள கொய்யா தோப்பு பகுதியில் செளமியா அன்புமணி பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது அவர் மேடையில் பேசியதாவது:

Continues below advertisement

மது அடிமைத்தனத்தில் விழுப்புரம்

"விக்கிரவாண்டி தொகுதி எப்போதும் வரலாறு படைக்கும் தொகுதியாக உள்ளது. இடைத்தேர்தலில் ஆளுங்கட்சிதான் வெற்றிபெறும் என்ற நிலையை பா.ம.க. முறியடித்துள்ளது. இடஒதுக்கீடு போராட்டத்தில் விழுப்புரம் மாவட்டத்தில் மட்டும் 13 பேர் உயிர் தியாகம் செய்தனர். இன்று விழுப்புரம் மாவட்டம் கல்வியில் முதலிடம் வகிக்கவில்லை; மதுவால் அடிமையானவர்களில் தான் முதலிடம் வகிக்கிறது" என்று வேதனை தெரிவித்தார்.

மிட்டாய்க் கடைகள் போல மதுக்கடைகள்

பள்ளி, கல்லூரி, கோயில் உள்ள பகுதிகளில் சந்து கடைகள் மூலமாக மது மற்றும் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அவர் குற்றஞ்சாட்டினார். அங்கொன்றும் இங்கொன்றுமாக இருந்த மதுப்பழக்கம், இப்போது கிராமம் முழுவதும் பரவி, தமிழ்நாடே மது அருந்தும் இடமாக மாறியுள்ளது என்றும், "மிட்டாய்க் கடைகள் போலச் சாராயக்கடைகள் தமிழகத்தில் திறக்கப்பட்டுள்ளன" என்றும் சாடினார். "ஆட்சிக்கு வந்தவுடன் படிப்படியாக மது விற்பனையைக் குறைப்போம் என்று கூறிய தி.மு.க. அரசு அதனைச் செய்யவில்லை. மதுபானக் கடைகளின் எண்ணிக்கையும் குறையவில்லை" என அவர் தெரிவித்தார்.

Continues below advertisement

மகளிர் உரிமைத் தொகைக்கான ஆதாரம்?

போதையால் பெண்களுக்குப் பாதுகாப்பில்லை என்றும், பாலியல் வன்கொடுமைகள் நடைபெறுவதால், மதுக்கடைகளை மூடிப் பெண்களைப் பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். ஆந்திராவில் சாராயம் கிடைக்காததால், தமிழகத்திற்கு மது அருந்த வருகிறார்கள் என்றும் கூறினார்.

மேலும், "மதுவை விற்றுவிட்டு, ஆயிரம் ரூபாயைத் தி.மு.க. அரசு கொடுக்கிறது. தீபாவளிப் பண்டிகையின் போது டாஸ்மாக்கில் விற்பனையான பணத்தைத் தான் மகளிர் உரிமைத் தொகையாக ஆயிரம் ரூபாயாக வழங்கப்படுகிறது" என்று அவர் கடுமையாகக் குற்றஞ்சாட்டினார். விக்கிரவாண்டியில் நந்தன் கால்வாய் திட்டம் முழுமையாகச் செயல்படுத்தப்பட்டால் விவசாயம் செழித்திருக்கும் என்றும் செளமியா அன்புமணி குறிப்பிட்டார்.