மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியரக கூட்ட அரங்கில், இன்று மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், தலைமையில் நடைபெற்ற வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பெருமளவில் திரண்டு வந்து தங்கள் குறைகள் தொடர்பான 401 மனுக்களை மாவட்ட ஆட்சியரிடம் நேரடியாக அளித்தனர்.
பொதுமக்கள் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அளித்த அனைத்து மனுக்களையும் பொறுமையுடன் கேட்டறிந்த மாவட்ட ஆட்சியர், அவற்றை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் உடனடியாக வழங்கி, மனுக்கள் மீது உரிய, விரைவான மற்றும் தரமான நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். மேலும், எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முழு விபரத்தையும் மனுதாரர்களுக்குத் தாமதமின்றித் தெரிவிக்க வேண்டும் என்றும் அலுவலர்களை அறிவுறுத்தினார்.
பல்வேறு கோரிக்கைகள் - மனுக்களின் எண்ணிக்கை விவரம்
பொதுமக்கள் அளித்த 401 மனுக்களில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தொடர்பான மனுக்களே அதிக அளவில் பெறப்பட்டன. அதன் விவரம் வருமாறு:
* கலைஞர் மகளிர் உரிமைத் தொகை: 163 மனுக்கள்
* இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் பட்டா மாறுதல்: 31 மனுக்கள்
* தொழிற்கடன் வழங்கக் கோரி: 32 மனுக்கள்
* முதியோர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் விதவை உதவித்தொகை: 21 மனுக்கள்
* அடிப்படை வசதி கோரி: 20 மனுக்கள்
* ஆக்கிரமிப்பு அகற்றக் கோரி: 18 மனுக்கள்
* சட்டம் ஒழுங்கு தொடர்பாக: 14 மனுக்கள்
* மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை, உபகரணங்கள், வங்கிக் கடன், உதவித்தொகை: 13 மனுக்கள்
* தொழிலாளர் நலன் தொடர்பாக: 13 மனுக்கள்
* நில அபகரிப்பு மற்றும் நிலப் பிரச்சனை: 12 மனுக்கள்
* இலவச கான்கிரீட் வீடு வேண்டி: 11 மனுக்கள்
* வேலைவாய்ப்பு கோரி: 10 மனுக்கள்
* குடும்ப அட்டை தொடர்பாக: 10 மனுக்கள்
* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் தொடர்பாக: 8 மனுக்கள்
* பல்வேறு புகார்கள்: 25 மனுக்கள்
மொத்தம் 401 மனுக்கள் பெறப்பட்டு, அவை மீது உரிய நடவடிக்கையைத் தொடங்க மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
குறைதீர்க்கும் கூட்டத்தின் முக்கிய அங்கமாக, மாவட்ட ஆட்சியர் ஹெச்.எஸ்.ஸ்ரீகாந்த், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 7 பயனாளிகளுக்கு சுமார் ரூ.86,820 மதிப்பிலான பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன
* சிறப்பு சக்கர நாற்காலிகள்: 2 பயனாளிகளுக்கு, தலா ரூ.9,750 வீதம்.
* மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரங்கள்: 2 பயனாளிகளுக்கு, தலா ரூ.6,820 வீதம்.
* திறன் பேசிகள் (ஸ்மார்ட் போன்): செவித்திறன் மற்றும் பார்வைத்திறன் குறைபாடுடைய 2 பயனாளிகளுக்கு, தலா ரூ.17,000 மதிப்பில்.
* காதொலிக் கருவி: 1 பயனாளிக்கு, ரூ.3,250 மதிப்பில்.
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை சார்பில், கள்ளச்சாராயம் விற்று மனம் திருந்தி வாழும் நபர்களுக்கான மறுவாழ்வு நிதி மூலம் பெட்டி கடை வைப்பதற்கு 2 பயனாளிகளுக்கு தலா ரூ.50,000 வீதம் நிதியுதவியும் மாவட்ட ஆட்சியரால் வழங்கப்பட்டது.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியருடன் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) கீதா, மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை அலுவலர் உமாமகேஷ்வரன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சித்ரா, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் மலைமகள், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (கணக்கு) மணிக்கண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.
குறைதீர்க்கும் நாள் கூட்டம் காரணமாக மாவட்ட ஆட்சியரகம் இன்று மிகுந்த பரபரப்புடன் காணப்பட்டது. கடந்த வாரம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் 287 மனுக்கள் பெறப்பட்ட நிலையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் 401 மனுக்களை பொதுமக்கள் வழங்கியுள்ளது குறிப்பிட்டத்தக்கது.