தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


தமிழ்நாட்டில் கடந்த மே மாதம் மற்றும் ஜூன் மாதத்தின் நடுப்பகுதி வரை வெயில் மக்களை வாட்டி வதைத்து வந்தது. இதனால் பள்ளிகள் திறப்பு தள்ளிவைக்கப்பட்டது. மக்கள் பகல் நேரங்களில் வெளியே வரவே தயங்கும் அளவுக்கு கடுமையான அனல்காற்றும் வீசியது. ஆனால் ஜூன் மாதத்தின் 2ஆம் பாதி முதல் தொடர்ந்து தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. 


இதனிடையே தமிழ்நாட்டில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 25 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, விருதுநகர், மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, ஈரோடு, நீலகிரி ஆகிய மாவட்டங்களில் இலேசான முதல் மிதமான மழை பெய்யலாம் என கணிக்கப்பட்டுள்ளது. 


இதேபோல் திருவள்ளூர், ராணிபேட்டை, சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருப்பத்தூர், வேலூர், தர்மபுரி, சேலம், திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் இலேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதனிடையே குற்றால அருவிகளில் சீசன் களைக்கட்ட தொடங்கியுள்ளது. அங்கே சாரல் மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் அனைத்து அருவிகளும் தண்ணீர் விழுகிறது. இதனால் குற்றால சீசனை அனுபவிக்க பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் தென்காசி மாவட்டத்திற்கு படையெடுத்து வருகின்றனர்.


அடுத்த 3 நாட்களுக்கான வானிலை அறிவிப்பு


மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு ஆந்திர கடலோரப்பகுதிகளின் மேல் வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, ஜூலை 5 முதல் 7 ஆம் தேதி வரை தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். 


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை எட்டியே இருக்கக்கூடும் என கூறப்பட்டுள்ளது.


மீனவர்களுக்கான எச்சரிக்கை:


இன்றைய தினம் (ஜூலை 5) தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகள், இலங்கை கடலோரப்பதிகள். தெற்கு வங்கக்கடல் பகுதிகள், மற்றும் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்க செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.