அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள சூழலில், மத்தியில் ஆளும் பாஜக பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதில் தற்போது பெரும் பேசுபொருளாக மாறியிருப்பது ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம்தான். வரும் 18ஆம் தேதி தொடங்க உள்ள நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கான மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த வாரம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இந்தியாவிற்காக பேச பாட்காஸ்ட் தொடங்கப்படும் என அறிவித்திருந்தார். அதன்படி இன்று காலை முதன்முதலில் தனது பாட்காஸ்ட் சிரீஸ் வெளியிட்டுள்ளார்.
இது தொடர்பாக டிவிட்டர் வீடியோவில், “ தமிழ்நாட்டின் முதலமைச்சராக, நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் திமுகவின் தலைவராக முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உங்களில் ஒருவனாக இந்தியாவுக்காக பேசப்போவது தான் இந்த பாட்காஸ்ட் சிரீஸ். இந்தியாவிற்காக எல்லோரும் பேசியாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். காலம்காலமாக இந்திய மக்கள் போற்றி பாதுகாத்த ஒற்றுமை உணர்வு என்ற தத்துவத்தை சிதைத்து இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பை சிதைக்க பா.ஜ.க முயற்சி செய்து வருகிறது. 2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வந்த பின் அவர்கள் கொடுத்த மக்கள் நல வாக்குறுதி எதையும் நிறைவேற்றவில்லை. வெளிநாட்டில் இருந்து கருப்பு பணத்தை மீட்டு 15 லட்சம் தருவோம், ஆண்டுக்கு 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு, உழவர்களில் வருமான உயர்வு, அனைவருக்கும் சொந்த வீடு, இப்படி எல்லாம் வாயால் வடை சுட்டார்கள். ஆனால் 10 ஆண்டுகளாக எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. குஜராத் மாடல் என ஆட்சிக்கு வந்து இப்போது எந்த மாடல் என்றே தெரியாமல் ஆட்சி முடிய போகிறது. திராவிட மாடலின் சாதனையை புள்ளி விவரமோடு எடுத்துரைத்த பின் குஜராத் மாடல் பற்றி பேசுவது இல்லை. ஒட்டுமொத்த இந்தியாவின் நலன் என்பது ஒரு சில தனி நபரின் நலனாக மாறிவிட்டது. இந்தியாவுக்கு சொந்தமான ஏர் இந்திய நிறுவனம் தனியாருக்கு விற்கப்பட்டுள்ளது. அதேபோல் துறைமுகமும் தனியாருக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. உழவர்களின் வருமானம் இரு மடங்காக மாறவில்லை, ஏழைகளில் வாழ்க்கை தரம் உயரவில்லை இதனை மறைக்க தான் மதவாதத்தை தூண்டியுள்ளனர். மணிப்பூர் ஹரியானா போன்ற மாநிலங்கள் மதவாதத்தால் பற்றி எரிகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் கால்தடம் பதித்து இந்தியாவுக்காக பேசும் கட்சியாக இருக்க வேண்டும் என சொன்னதோடு அதை செய்தவர் கலைஞர். 2024 ஆம் ஆண்டு யார் ஆட்சிக்கு வரவேண்டும் என்பதை காட்டிலும் யார் ஆட்சிக்கு வர கூடாது என்பது தான் இந்த தேர்தல். மாநிலங்களின் நிதி உரிமையை முழுமையாக பரித்துவிட்டது இந்த ஜிஎஸ்டி. இதனால் தமிழ்நாட்டில் நிதி சுயாட்சி பரிப்போனது தான் மிச்சம். மத்திய அரசிற்கு வரியாக தமிழ்நாடு ஏராளமான நிதியை தருகிறது. 2014 முதல் கடந்த ஆண்டு வரை 5 லட்சத்து16 ஆயிரம் கோடி ரூபாயை வரியாக கொடுத்துள்ளோம். ஆனால் வரிப்பகிர்வாக நமக்கு கிடைத்தது வெறும் 2 லட்சத்து 8 ஆயிரம் கோடி ரூபாய் தான். ஆனால் பாஜக ஆளும் மாநிலங்களில் இது முற்றிலும் மாறாக நடைபெறுகிறது. இதைத்தான் ஓரைவஞ்சனை என கூறுகிறோம். தமிநாட்டிற்கு முத்திரை திட்டம் என்று ஒரு திட்டம் கூட கடந்த 9 ஆண்டுகளாக தரவில்லை. மக்களுக்கு நேரடியா நன்மை செய்யும் பொறுப்பில் இருக்கும் மாநில அரசுகளை சிதைப்பது தான் நோக்கமாக கொண்டுள்ளனர்.
இதன் மூலம் ஒட்டுமொத்த இந்தியாவை சிதைக்க பார்க்கிறார்கள். சமூக நீதி, சமத்துவம், மாநில சுயாட்சி, கூட்டாட்சி, வேற்றுமையில் ஒற்றுமை, இவை உயிர்வாழும் இந்தியா தான் உண்மையான இந்தியா. இதனை காப்பாற்றப்போவது I.N.D.I.A. வெறுப்பு அரசியலுக்கு மணிப்பூர் ஹரியானவில் நடந்த நிகழ்வு வேறு எங்கும் நடக்காமல் இருக்கு I.N.D.I.A. கூட்டணி வெற்றிப்பெற வேண்டும். பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவை செதுக்குவோம், இந்தியாவை காப்போம், அதற்காக முதலில் இந்தியாவுக்காக பேசுவோம். இனி இது மு.க ஸ்டாலின் குறலாக மட்டுமள்ளாமல், இந்தியாவின் குறலாக அமையும், இதனை எல்லோரிடதிலும் எடுத்துச்செல்ல வேண்டும். வெல்க இந்தியா” என பேசியுள்ளார்.