சேலம் மாவட்டம் மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில், கடந்த மூன்று மாதங்களாக அவ்வப்போது சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக மக்கள் தெரிவித்து வந்தனர். இதையடுத்து, வனத்துறை அதிகாரிகள், கேமரா பொருத்தி கண்காணித்தும், சிறுத்தை குறித்த தடயம் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், மலை பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடு, மாடுகள் மர்மமாக இறந்து கிடந்தன.


மேட்டூரில் சிறுத்தை நடமாட்டம்:


மேட்டூர் அடுத்துள்ள நங்கவள்ளி ஒன்றியத்தில் சன்னியாசி முனியப்பன் கோவில் தெருவை சேர்ந்த விவசாயி பழனிசாமி. கடந்த வாரம் வெள்ளிக்கிழமை மேய்ச்சலுக்கு அனுப்பிய ஆடுகளை மாலை வழக்கம் போல் வீட்டின் முன்பு உள்ள பட்டியில் அடைத்துவிட்டு உறங்கச் சென்றுள்ளார். கடந்த சனிக்கிழமை காலை வந்து பார்த்தபோது 15 கிலோ எடை கொண்ட வெள்ளாடு காணாமல் போனது.


வீட்டின் அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்று பார்த்தபோது ஆட்டின் தலை மற்றும் எச்சம் காணப்பட்டது. இது குறித்து பழனிசாமி மேட்டூர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால், இதற்கு காரணம் சிறுத்தையா? என சந்தேகம் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை அதிகாரிகள் நான்கு இடங்களில் கேமராக்கள் பொருத்தி சிறுத்தை நடமாட்டத்தை கண்காணித்து வருகின்றனர். 



சிறுத்தை இருப்பது உறுதி:


இதையடுத்து, கால் தடங்களை ஆய்வு செய்து வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ளதாக உறுதிப்படுத்தினர். இதைத்தொடர்ந்து சிறுத்தையை தேடும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். சிறுத்தையைப் பிடிப்பதற்காக நான்கு இடங்களில் கேமரா வைத்து கண்காணிக்கப்பட்டு வருகின்றது. மேலும் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதிகளில் மூன்று கூண்டுகள் அமைத்து வனத்துறை அதிகாரிகள் சிறுத்தையை தேடி வருகின்றனர்.


ஆனால் சிறுத்தை கடந்த ஒரு வாரமாக வனத்துறையால் வைக்கப்பட்ட எந்த கேமராவிலும் பதிவாகவில்லை. இதனால் சிறுத்தை வேறு பகுதிக்கு சென்று விட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில், மேட்டூரிலும் சிறுத்தை நடமாட்டத்தை உறுதி செய்த வனத்துறை அதிகாரிகள், கடந்த 8 மாதங்களாக காடையாம்பட்டியில் நடமாடிய சிறுத்தை மேட்டூர் வந்துள்ளதா? அல்லது சேலம் மாவட்டத்தில் இரண்டு சிறுத்தைகள் நடமாடி வருகிறதா? என்ற குழப்பம் தற்போது எழுந்துள்ளது. 



குழந்தைகளை வெளியே அனுப்ப வேண்டாம்:


பொது மக்கள் தனியாக வனப்பகுதிக்கோ, வனத்தை ஒட்டியுள்ள பகுதிக்கோ செல்ல கூடாது. வனப்பகுதியில் ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்கு விடக்கூடாது. 10 வயதுக்குள் உள்ள குழந்தைகள் வனப்பகுதியை ஒட்டியுள்ள வயல் வெளிக்கு அனுப்ப கூடாது என வனத்துறை சார்பில் தொடர்ச்சியாக எச்சரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், காடையாம்பட்டி, ஓமலூர், மேட்டூர் வனப்பகுதிகளில் சிறுத்தை மாறி மாறி நடமாடி வருகிறது. சிறுத்தை ஒரே இடத்தில் இல்லாமல், உணவு தேவைக்கு ஏற்ப, வனத்தின் அனைத்து பகுதிகளுக்கும் சென்று வருவதால், அதை கண்காணிக்க முடியாமலும், கண்டுபிடிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளதாக வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


மேலும், மேட்டூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள பகுதிகளில் வனத்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதேபோன்று ஊராட்சி முழுவதும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் எனவும் ரேடியோ மூலம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. கடந்த எட்டு நாட்களாக சிசிடிவி கேமராவில் பதிவாகாததால் மீண்டும் சிறுத்தை எப்போது வரும் என தெரியாமல் மேட்டூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.