தமிழ்நாடு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நவம்பர் 18ம் தேதி, அதாவது வரும் சனிக்கிழமை கூட உள்ளது. ஆளுநர் திருப்பியனுப்பிய மசோதாக்களை  மீண்டும் நிறைவேற்றி அனுப்ப தமிழக  அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 


தமிழக அரசு தொடர்ந்த வழக்கு:


சட்டமன்றத்தில்  நிறைவேற்றி அனுப்பிய  மசோதாக்களுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கவில்லை என, உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கு விசாரணையில் ஆளுநரின் நடவடிக்கைக்கு எதிராக நீதிமன்றம் பல்வேறு கருத்துகளை கூறி இருந்தது. அதன்படி, ஆளுநர் ரவி சட்டசபை மசோதாக்களை நிலுவையில் வைத்திருப்பதாக தமிழ்நாடு அரசு முன்வைக்கும் குற்றச்சாட்டுகள் தீவிரமானவை. அரசியல் சாசனம் 200-வது பிரிவின்படி சட்டசபையில் நிறைவேற்றிய அனுப்பிய மசோதாவுக்கு ஒப்புதல் வழங்காத நிலையில் மறுபரிசீலனைக்காக கூடிய விரைவில் ஆளுநர் சட்டசபைக்கு திருப்பி அனுப்ப வேண்டும். அப்படி திருப்பி அனுப்புகிற மசோதாவை சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பினால் அதற்கு தாமதம் இல்லாமல் ஆளுநர் ஒப்புதல் தர வேண்டும். மசோதாக்கள், கோப்புகள் மீது ஆளுநர் ஏன் முடிவெடுக்காமல் இருக்கிறார் என்பது குறித்து ஆளுநரின் செயலாளர் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். இந்த விவகாரத்தில் மத்திய அரசும் பதிலளிக்க வேண்டும்” எனவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. பஞ்சாப் ஆளுநர் தொடர்பான வழக்கில், மசோதாக்களை கிடப்பில் வைத்திருப்பது ஏன் எனவும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியிருந்தது.


மசோதாக்களை திருப்பி அனுப்பிய ஆளுநர்:


இதையடுத்து நீண்ட காலமாக நிலுவையில் இருந்த 10 மசோதாக்கள் மீது விளக்கம் கேட்டு ஆளுநர் அவற்றை திருப்பி அனுப்பியுள்ளார். இந்நிலையில் வரும் சனிக்கிழமை சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்தி, ஆளுநர் திருப்பி அனுப்பிய மசோதாக்களை மீண்டும் நிறைவேற்றி ஆளுநரின் ஒப்புதலுக்காக மீண்டும் அனுப்ப தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே நீட் தேர்வு விலக்கு தொடர்பாக சிறப்பு கூட்டத்தொடர் நடைபெற்று இருந்த நிலையில், தற்போது மீண்டும் சிறப்பு கூட்டத்தொடர் கூட்டப்படவுள்ளது.


ஆளுநர் ஆர்.என்.ரவி திருப்பி அனுப்பிய மசோதாக்கள்:



  • சென்னை பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

  • தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

  •  தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

  • தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

  •  தமிழ்நாடு அன்னை தெரசா மகளிர்  பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

  •  தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

  •  தமிழ் பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

  • தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

  •  அண்ணா பல்கலைக்கழக சட்ட திருத்த மசோதா

  • தமிழ்நாட்டில் புதிதாக சித்த மருத்துவ பல்கலைக்கழகம் அமைப்பதற்கான சட்ட திருத்த மசோதா