தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது. 


தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கி மே 10-ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடத்தப்பட்டு பல்வேறு முக்கிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. 


இதையடுத்து குறைந்தது 6 மாதங்களுக்கு ஒரு முறை சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற வேண்டும். அதன் காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்திற்கு பிறகு இந்த அக்டோபரில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறுகிறது. 


அக்டோபர் 17-ஆம் தேதி சட்டப்பேரவை கூட்டம் : 


தமிழ்நாடு சட்டப்பேரவையில் மழைக்கால கூட்டத்தொடர் வருகிற அக்டோபர் 17-ஆம் தேதி தொடங்கி நடைபெற இருக்கிறது. அன்றைய நாளில் முன்னாள் தலைவர் சேடப்பட்டி முத்தையா உள்ளிட்ட மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அவை ஒத்திவைக்கப்படும். 


தொடர்ந்து அன்றைய நாளில் பேரவைத்தலைவர் மு. அப்பாவு தலைமையில் அலுவல் ஆய்வு கூட்டம் நடத்தப்பட்டு, பேரவை எத்தனை நாட்கள் நடத்தலாம் என்பது குறித்து முடிவு எடுக்கப்படும். 


இந்தநிலையில், சட்டப்பேரவையில் விவாதிக்கப்பட வேண்டியவைகள் குறித்து முடிவெடுப்பதற்காக இன்று முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இதில், அமைச்சர்கள், பல்வேறு முக்கிய துறையின் அதிகாரிகள் பங்கேற்க இருக்கின்றனர். 


ஆன்லைன் தடை சட்டம்: 


சமீபத்தில் தமிழ்நாட்டில் ஆன்லைன் சூதாட்ட விளையாட்டிற்கு அவசர சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டத்திற்கு நிரந்தர அந்தஸ்து வழங்க, வருகின்ற சட்டப்பேரவையில் அறிக்கை தாக்கல் செய்யப்படும். 


ஸ்டெர்லைட் மற்றும் ஜெயலலிதா மரணம் தொடர்பான அறிக்கை:


ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, ஸ்டெர்லைட் விவகாரத்தில் துப்பாக்கிச்சூடு தொடர்பான அருணா ஜெகதீசன் அறிக்கை ஆகியவை தாக்கல் செய்யப்பட இருக்கின்றனர். இதுகுறித்தும் வருகின்ற கூட்டத்தொடரில் விவாதிக்கப்பட இருக்கின்றனர். 


இது தவிர புதிய சட்ட மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட இருக்கின்றனர். இந்த புதிய மசோதாக்கள் குறித்தும் இன்று நடைபெறும் அமைச்சரவையில் விவாதிக்கப்பட்டு, அவை பேரவையில் ஒப்புதல் அளிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


முன்னதாக சட்டப்பேரவை குறித்து பேசிய சபாநாயகர் அப்பாவு, “அக்டோபர் 17 ஆம் தேதி, காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும். சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து, அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். கூட்டத்தொடரில் துணை நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.


இதுவரை கேள்வி-பதில் நேரம் நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறோம். மேலும் முழுமையாக நேரலையாக வழங்குவது என்பது, அரசின் தேர்தல் அறிக்கையிலையே குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, முழுமையான நேரலைக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம். விரைவிலையே முழுமையான நேரலைக்கான வாய்ப்பு உள்ளது எனவும் அப்பாவு தெரிவித்தார். 


மேலும், அதிமுக இரட்டை தலைமை விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பேரவைத் தலைவர், சட்டப்பேரவை மரபு படி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.