சென்னை ஆவடி அருகே செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் பொறியியல் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
செல்போனில் கேம்:
ஆவடி அடுத்த விவேகானந்தா நகர் வ.உ.சி தெருவை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவரது மகன் தினேஷ் குமார் பூந்தமல்லி அருகே உள்ள தனியார் கல்லூரியில் பொறியியல் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இவர் கடந்த ஒரு வாரமாக கல்லூரிக்கு செல்லாமல் போனில் ஆன்லைன் கேம் விளையாடிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இதனைக் கண்ட மாணவரின் தந்தை குருமூர்த்தி மகனை கண்டித்துள்ளார்.
தற்கொலை:
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு படுக்கையறைக்கு தூங்க சென்ற தினேஷ் மறுநாள் காலையில் நீண்ட நேரமாகியும் எழுந்து வரவில்லை. இதனால் சந்தேகமடைந்த குருமூர்த்தி மகனை அழைப்பதற்காக அறைக்குள் சென்றுள்ளார். அப்போது மகன் மின் விசிறியில் தூக்கில் தொங்கிக்கொண்டிருந்ததை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார். இதனையடுத்து அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தகவல் அறிந்த ஆவடி போலீசார் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்ததுடன் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் இந்த சம்பவம் குறித்து தொடர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விளையாட்டிற்கு அடிமை:
முன்னதாக திருச்சி அருகே செல்போனில் கேம் விளையாடியதை தந்தை கண்டித்ததால் பிளஸ் 1 மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். திருச்சி மாவட்டம் சோமரசம்பேட்டையை அடுத்த சந்தாபுரத்தை சேர்ந்தவர் சங்கர். இவர் திருச்சி பருப்புகார தெருவில் இனிப்புக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் பாலஹரிநாத், காட்டூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். கொரோனா பொதுமுடக்கம் காரணமாக பள்ளி திறக்காத நிலையில், வீட்டில் இருந்தே ஆன்லைன் வகுப்பில் பங்கேற்று படித்து வந்துள்ளார்.
இந்த நிலையில், அவர் செல்போனில் பப்ஜி கேம் டவுன்லோட் செய்து விளையாடி வந்துள்ளார். இதனால் படிப்பில் சரியாக கவனம் செலுத்தாததால் சமீபத்தில் நடந்து முடிந்த ஆன்லைன் தேர்வில் குறைந்த மதிப்பெண்கள் பெற்றுள்ளார். மேலும், படிப்பதற்காக கொடுக்கப்பட்ட 5 ஜிபி டேட்டாவை ஒரே நாளில் விளையாடி தீர்த்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த தந்தை அவரை கடுமையாக கடிந்து கொண்டார்.
குடும்பத்தினர் அதிர்ச்சி:
இதனால் மனமுடைந்த பாலஹரிநாத், தனது அறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால் அவரது அக்கா கதவை தட்டியுள்ளார். அவர் பதில் அளிக்காததால், கதவை உடைத்துச்சென்று உள்ளே பார்த்தபோது, பால ஹரிநாத் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்தார். இதனை கண்டு குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்த சோமரசம்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, மாணவர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
வாழ்க்கையில் கவலைகளும், துன்பங்களும் வந்து கொண்டுதான் இருக்கும். அவைகளை தற்காலிகமாக்குவதும், நிரந்தரமாக்குவதும் நாம் கையாளும் விதத்தில் தான் உள்ளது. தற்கொலை என்பது எதற்கும் தீர்வு ஆகாது. வாழ்க்கைக்கான நோக்கத்தைப் பற்றிய தெளிவும் அதை அடைவதற்கான வழிகளையும் கண்டறிய துவங்கினால் வாழ்க்கை சுவாரஸ்யமானதாக இருக்கும். அப்படி தங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ தற்கொலை எண்ணம் உண்டானாலும் அதனை மாற்ற கீழ்காணும் எங்களுக்கு அழைக்கவும். மாநில உதவி மையம் :104.
சினேகா தன்னார்வ தொண்டு நிறுவனம்,
எண்; 11, பார்க் வியூவ் சாலை, ஆர்.ஏ. புரம்,
சென்னை - 600 028.
தொலைபேசி எண் - (+91 44 2464 0050, +91 44 2464 0060)