மணிப்பூர் மாநிலத்தின் புதிய ஆளுநராக பாஜக முன்னாள் தலைவர் இல.கணேசன் நியமனம். இங்கு ஆளுநர் பணியிடம் காலியாக இருந்த நிலையில், குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். அதன் அடிப்படையில் தமிழ்நாட்டிலிருந்த தமிழிசைக்கு அடுத்தபடியாக இரண்டாவது நபராக இல.கணேசன் ஆளுநராக நியமிக்கப்படுகிறார். பாஜகவின் தேசியக்குழு உறுப்பினராகவும் இல.கணேசன் இருந்து வருகிறார்.
இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் உட்பட பல்வேறு தலைவர்களும் ட்விட்டரில் இல.கணேசனுக்கு தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலினின் வாழ்த்தில், 'மணிப்பூர் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள தலைவர் கலைஞரின் அன்பைப் பெற்ற பண்பாளரும்; நீண்ட அரசியல் அனுபவத்துக்குச் சொந்தக்காரருமான அண்ணன் திரு. இல.கணேசன் அவர்களுக்கு வாழ்த்துகள்!’ என ட்வீட் செய்துள்ளார்.
தெலங்கானா ஆளுநர் தமிழிசையின் வாழ்த்துச் செய்தியில் தொலைபேசியில் அழைத்து இல.கணேசனுக்கு வாழ்த்து தெரிவித்ததாகக் கூறியுள்ளார்.
தமிழ்நாடு பாரதிய ஜனதா தலைவர் அண்ணாமலையின் வாழ்த்துச் செய்தியில், ‘சின்சியரான மனிதருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் வாய்ப்பு’ எனக் குறிப்பிட்டுள்ளார்.