2021 செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான திமுக வேட்பாளராக  எம்.எம் அப்துல்லா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ள அப்துல்லா தொலைக்காட்சி ஒன்றுக்கு தொலைபேசி வாயிலாக பேசும்போது, “இது எனக்கு ஒரு பெரிய வாய்ப்பு. இந்த வாய்ப்பு அளித்த திமுக தலைவர் ஸ்டாலினுக்கு நன்றிகள். இந்த வாய்ப்பை பயன்படுத்தி திராவிட இயக்க கொள்கைகளையும், தமிழ் மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையிலும் பணியாற்ற வேண்டும்” என தெரிவித்துள்ளார். 


தமிழ்நாட்டில் காலியாக இருக்கும் ஒரு இடத்துக்கான மாநிலங்களவை தேர்தல் செப்டம்பர் 13ஆம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதிமுகவின் முகமது ஜானின் மறைவையடுத்து அந்த இடத்துக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. 2021 மார்ச் 23ஆம் தேதி அதிமுக மாநிலங்களவை எம்பி முகமது ஜான் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் மாநிலங்களவை எம்பிக்கள் கே.பி.முனுசாமி மற்றும் ஆர்.வைத்தியலிங்கம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவர்கள் தங்களது எம்பி பதவியை ராஜினாமா செய்தனர். இதனால் மாநிலங்களவையில் காலி இடங்கள் 3ஆக அதிகரித்தது.


Also Read: Tamil Nadu Lockdown News : பள்ளிகள், தியேட்டர்கள் திறப்பு.. தளர்வுகளை அறிவித்த தமிழக அரசு!


தமிழ்நாட்டில் மூன்று இடங்கள் காலியாக உள்ள நிலையில், தற்போது ஒரு இடத்துக்கு மட்டும் தேர்தல் நடைபெறுகிறது. திமுக கோரிக்கையை ஏற்று 3 இடங்களுக்கும் தனித் தனியாக தேர்தல் நடத்தும் விதமாக தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.


இதற்கான வேட்புமனு தாக்கல் ஆகஸ்ட் 24ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை நடைபெறும். செப்டம்பர் 1ஆம் தேதி வேட்புபனு பரிசீலனை, வேட்புமனுவை திரும்பப் பெற கடைசி நாள் செப்டம்பர் 3ஆம் தேதி ஆகும். தேர்தல் செப்டம்பர் 13 அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வரையிலும், முடிவுகள் அன்றைய தினம் மாலை 5 மணிக்கு வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், சட்டமன்ற தேர்தலில் போட்டியிட இடம் கிடைக்காத நிலையில் மாநிலங்களவை உறுப்பினராக எம்.எம். அப்துல்லாவை நாடாளுமன்றம் அனுப்புகிறது திமுக. எம்.எம்.அப்துல்லா, திமுகவின் வெளிநாடுவாழ் இந்தியர் நல அணியின் இணைச் செயலாளராக உள்ளார்.  திமுகவின் ஐடி விங்க் துணைச் செயலாளராக பணியாற்றினா் என்பது குறிப்பிடத்தக்கது. 


Also Read: New Manipur Governor: மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம்: பிரதமருக்கு நன்றி தெரிவித்தார்!