ஆசிரியர் தினமான இன்று குஷ்பூ, முன்னாள் முதல்வர் கலைஞருக்கு நன்றி தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.


டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான இன்று நாடு முழுக்க ஆசிரியர் தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பல்வேறு தரப்பினரும் தங்களது ஆசிரியர்களுக்கும் ஆசான்களுக்கும் சமூக வலைதளங்களில் நன்றியையும் வாழ்த்துகளையும் தெரிவித்து வருகின்றனர்.


இதையடுத்து பாஜகவை சேர்ந்த நடிகர் குஷ்பு தனக்கு அரசியல் கற்றுத்தந்த சிறந்த ஆசிரியர் கலைஞர் என பதிவிட்டுள்ளார். இந்நிலையில் திமுகவிற்கு நேரெதிரான கொள்கை கொண்டுள்ள பாஜகவின் உறுப்பினரான குஷ்பூவின் அந்த ட்வீட் சமூக வலைதளங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது.


அந்த பதிவில்,  “அரசியல் என்பது நம்பிக்கையும் சேவையும்தானே தவிர வெறுப்புணர்வோ அல்லது நம்பிக்கை இழப்போ அல்ல என்பதை எனக்கு கற்றுத்தந்த எனது வழிகாட்டியும்,  எனது சிறந்த ஆசிரியருமான டாக்டர் கலைஞர் அவர்களுக்கு முக்கியமாக நான் நன்றி தெரிவிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். தனது ஆரம்ப காலங்களில் திமுகவிலிருந்த நடிகை குஷ்பூ அங்கு நிர்வாகிகளுடனான கருத்து வேறுபாட்டின் காரணமாக அங்கிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில்இணைந்தார். அதன் பிறகு பாஜகவில் சேர்ந்தார். கடந்த சட்டசபை தேர்தலிலின்போது சென்னையில் உள்ள ஆயிரம் விளக்கு தொகுதியில் பாஜக சார்பில் வேட்பாளராக குஷ்பு களமிறங்கினார். திமுகவிற்கு எதிராக தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டார். ஆனால் திமுக வேட்பாளர் டாக்டர் எழிலன் அந்த தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராக தேர்வானார்.


இதனைத் தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் கலைஞர் கருணாநிதியின் 98வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. அப்போது அவருக்கு புகழாரம் சூட்டி சமூக வலைதளங்களில் நடிகை குஷ்பு பதிவிட்டிருந்தார். அப்போது, “வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதாக நான் உணராத ஒரு நாள் கூட இல்லை. கடவுளை விட குரு மேலானவர். நீங்கள்தான் எனது சிறப்பான ஆசிரியர். உங்களது ஆசீர்வாதங்கள் எப்போதுமே என் மீது விழுந்து கொண்டே இருக்கும் என்பது உறுதி. மிஸ் யூ அப்பா” என குஷ்பு குறிப்பிட்டிருந்தார்.


ஒரு பக்கம் பாஜகவினரின் திமுகவையும் அக்கட்சியின் முன்னாள் தலைவர் கருணாநிதியையும் விமர்சித்து வருகின்றனர். இன்னொரு பக்கம் பாஜக உறுப்பினரான குஷ்பூ வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம்  கலைருக்கு பாராட்டு தெரிவிக்கிறார். இந்நிலையில் குஷ்பூவின் ஆசிரியர் தின பதிவுக்கு பல்வேறு தரப்பினரும் பின்னூட்டங்களை பதிவு செய்து வருகின்றனர். அதில், கலைஞரிடமிருந்து நீங்கள் எதையாவது கற்றிருந்தால் பாஜக போன்ற கட்சியில் இணைந்திருக்கவே மாட்டீர்கள் என்றும் மாற்ற்க் கட்சியை சார்ந்த தலைவர்களையும் கூட பாராட்டும் அளவுக்கு அரசியல் நாகரிகமும் தைரியமும் குஷ்பூவிடம் உள்ளது எனவும் பல கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.