தமிழகத்தில் கடந்த சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய பிரதான கட்சிகளுடன் அறிமுக கட்சியாக களமிறங்கிய கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம் கட்சி மிகுந்த எதிர்பார்ப்பை மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருந்தது. எந்த தொகுதியிலும் வெற்றி பெறாவிட்டாலும், அந்த கட்சி 9 லட்சம் வாக்குகளை ஒட்டுமொத்தமாக பெற்றிருந்தது. அக்கட்சித் தலைவர் கமல்ஹாசன் கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனிவாசனுக்கு கடும் நெருக்கடி அளித்தே தோல்வியுற்றார்.
ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் மக்கள் நீதிமய்யத்தில் இருந்து முக்கிய நிர்வாகிகளான மகேந்திரன், சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ்., இளம் நிர்வாகி பத்மபிரியா ஆகியோர் அடுத்தடுத்து விலகினர். இந்த சூழலில், அக்கட்சியின் மற்றுமொரு முக்கிய நிர்வாகியான சி.கே குமரவேலும் இன்று கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
இதுதொடர்பாக, அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றில் அளித்த பேட்டியில் கமல்ஹாசன் மீது கடும் குற்றச்சாட்டுகளை வைத்துள்ளார். அவர் கூறியுள்ள குற்றச்சாட்டில், ஒரு தொகுதியில் வெற்றிபெற்றால் போதும் என்ற மனப்பான்மையில்தான் கட்சித் தலைமை இருந்தது என்றும், தமிழகத்தில் மக்கள் நீதி மய்யம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்த்தோம் என்றும், ஆனால், எதையும் செய்ய முடியவில்லை என்றும் அவர் கூறினார். தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்கு மாற்றாக கமல்ஹாசன் ஏதாவது செய்வார் என்று எதிர்பார்த்தோம். ஆனால், அவர் எதையும் செய்யவில்லை என்று கூறினார்.
இதுதவிர, மார்ச் மாதத்திற்கு பிறகு கட்சிக்கு தொடர்பே இல்லாதவர்கள் கட்சிக்குள் நுழைந்து முடிவெடுக்க தொடங்கினர். இது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. தேர்தல் நேரத்தில் எதுவும் சொல்லக்கூடாது என்று அமைதியாக இருந்து செயல்பட்டோம். ஆனால், அதன் பின்னரும் மாறவில்லை என்று தெரிவித்துள்ளார். தேர்தல் தோல்விக்கு பிறகு, கமல்ஹாசனை நேரில் சந்தித்து தேர்தல் தோல்விக்கான காரணங்கள் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். ஆனால், அவர் அதை செய்யவில்ல என்றும் கூறினார். 2019-இல் கட்சியில் இருந்து விலகியபோது, கமலுடன் எந்த பிரச்சினையும் இல்லை என்று கூறிய குமரவேல், இரண்டாவது முறையாக இணைந்தபோது அனைத்து பிரச்சினைகளுக்கும் கமல்ஹாசனே காரணம் என்று குற்றம்சாட்டினார்.
கமல்ஹாசன் கட்சி நடத்தவில்லை. அவர் கம்பெனி நடத்துகிறார் என்று குற்றம் சாட்டிய குமரவேல், அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் அவர்தான் என்று தெரிந்ததால் இனியும் கட்சியில் நீடிப்பதில் பயனில்லை என்று விலகினேன் என்று விளக்கம் அளித்தார். கமல்ஹாசன் கட்சியில் இருந்து நிர்வாகிகள் அனைவரும் தொடர்ச்சியாக விலகுவது, அக்கட்சியின் தொண்டர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதனால், கட்சியில் விரைவில் புதிய நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.