திண்டிவனம் - கிருஷ்ணகிரி  நெடுஞ்சாலையை 4 வழிச்சாலையாக மாற்ற திட்ட அறிக்கை: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி  ஆணை

திண்டிவனம் - கிருஷ்ணகிரி செல்லும் தேசிய நெடுஞ்சாலை ( என்எச் 66 ) போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த சாலையாக உள்ளது. குறிப்பாக இச்சாலை வழியாக திருவண்ணாமலை, மேல்மருவத்தூர், புதுச்சேரி உள்ளிட்ட ஊர்களுக்கு கர்நாடக மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் ஆன்மிக பயணம் செய்கின்றனர். புதுச்சேரியில் இருந்து திண்டிவனம் வழியாக பெங்களூர் செல்ல வேண்டும் என்றால், திண்டிவனம், திருவண்ணாமலை வழியாக கிருஷ்ணகிரியை கடந்து தான் போக வேண்டும். இதுதான் பிரதான வழி.. ஆனால் இந்த சாலை இருவழிச்சாலையாகவே உள்ளது. இந்த இருவழிச்சாலையே பல ஆண்டுகளாக போடப்படாமல் பல கட்ட வலியுறுத்தலுக்கு பிறகே பணிகள் நடந்தது.

182 கி.மீ நீளமுள்ள கிருஷ்ணகிரி- திண்டிவனம் நெடுஞ்சாலை இருவழிப் பணிகள் கடந்த ஆண்டுதான் நிறைவடைந்தன, நங்கிலிகொண்டான், கரியமங்கலம் மற்றும் நாகம்பட்டியில் டோல்கேட்டுகளை அமைத்துள்ளது. கடந்த 2012ல் தொடங்கிய இந்த பணி, மூலப்பொருட்களின் விலை அதிகரிப்பு மற்றும் திட்டத்தை ஆர்டர் எடுத்த நிறுவனம் கைவிட்டதால் மிகவும் தாதமானது. இதனால் இந்த சாலை பணிக்கு ரூ.624 கோடி வரை செலவானது. ஒரு வழியாக முடிந்து வாகனங்கள் ஓடும் நிலையில், நானகு வழிச்சாலையாக மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளது .

இதுகுறித்து மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரியிடம் பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தி இருந்த நிலையில் அதற்கு ஒப்புதல் கிடைத்துள்ளது. இது குறித்து அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்.,

திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை  இரு வழிச் சாலை என்ற நிலையிலிருந்து  நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த  நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய நெடுஞ்சாலைகள் துறை அமைச்சர் நிதின் கட்கரி  தெரிவித்துள்ளார்.

மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அவர்களை கடந்த பிப்ரவரி 13-ஆம் தேதி  தில்லியில் சந்தித்து பேசினேன். திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான இரு வழிச் சாலையை நான்கு வழிச்சாலையாக தரம் உயர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட 12 கோரிக்கைகளை முன்வைத்து அவை அனைத்தையும் நிறைவேற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டேன். இது தொடர்பாக கடந்த ஆண்டு செப்டம்பர் 3-ஆம் தேதி விரிவான கடிதம்  எழுதியிருந்தேன்.

திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலை இரு வழிச் சாலையாக இருப்பதால் அடிக்கடி விபத்துகள் நடப்பதாகவும்,  விபத்துகளைத் தவிர்க்க அதை நான்கு வழிச்சாலையாக  தரம் உயர்த்த வேண்டும் என்றும் அந்தக் கடிதத்தில் வலியுறுத்தியிருந்தேன்.

அதைத் தொடர்ந்து அமைச்சர் நிதின்கட்கரி எனக்கு எழுதியுள்ள கடிதத்தில் திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை   நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க ஆணையிட்டிருப்பதாகவும்,  திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டவுடன் அதன் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

மத்திய அமைச்சரின் கடிதம் மிகுந்த மனநிறைவு அளிக்கிறது

மத்திய அமைச்சரின் கடிதம் மிகுந்த மனநிறைவு அளிக்கிறது. எனது கோரிக்கையை ஏற்றுக் கொண்டதற்காக அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். விரிவான திட்ட அறிக்கை விரைவில் தயாரிக்கப்பட்டு, அதனடிப்படையில் திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான தேசிய நெடுஞ்சாலையை  நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தொடங்கும் என்று நம்புகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.