திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி புதூர் பெரியார் நகரை சேர்ந்த அருள் வயது (22) இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இவர் கடந்த 6 ஆண்டுகளாக வயிற்றுவலி மற்றும் சிறுநீர் கழிப்பதில் சிரமம் போன்ற பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதற்காக பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் அருள் சிகிச்சையும் பெற்றும் வந்துள்ளார். ஆனால் அவருக்கு எந்தவித பலன் அளிக்கவில்லை. மேலும் அருளுக்கு வயிற்று வலி சிறுநீர் பரிசோதனை தொடர்ந்து இருந்து வந்துள்ளது. அதனைத்தொடர்ந்து அருள் அவர் கிராமபகுதியை சேர்ந்த நபர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நல்லமுறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு பல நோய்களையும் குணப்படுத்தி வருவதாக கூறியுள்ளனர்.



 


அதனையடுத்து அருள் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டனர். அப்போது அவருக்கு சிறுநீரக பையில் 12 முதல் 13 சென்டி மீட்டர் அளவில் 300 கிராம் எடையுடைய கல் ஒன்று இருப்பது மருத்துவர்கள் கண்டறிந்தார்கள். அதனைத்தொடர்ந்து மருத்துவர்கள் அவருக்கு சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்கள் அருண் விஜயன், தமிழ் முத்து மற்றும் மயக்கவியல் மருத்துவ நிபுணர் பிரபு ஆகியோர் தலைமையில், மருத்துவர்கள் சுபா, சதீஷ் ஆகியோர் கொண்ட மருத்துவ குழுவினர் அதிநவீன கருவிகள் மூலம் 300 கிராம் எடையில் இருந்த கல்லை வெற்றிகரமாக அகற்றி சாதனை படைத்தனர். இதனால் நோயாளிகள் மத்தியிலும் பொதுமக்களும் மருத்துவர்களை பாராட்டினர். 


 




 


இதுகுறித்து கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அசோகன் கூறுகையில்:


நாம் அனைவரும் கோடை காலங்களில் போதிய அளவு தண்ணீர் அருந்தாமல் இருத்தல், சிறுநீரை அவ்வப்போது வெளியேறாமல் இருத்தல் அமிலத்தன்மை அதிகம் உள்ள உணவு வகைகள் (மாமிசம்) அதிகம் உண்ணுதல் போன்ற காரணங்களால் யூரிக் அமிலம், பாஸ்பேட், கால்சியம், ஆக்ஸலேட் போன்ற உப்புக்கள் சிறுநீரகத்தில் படிந்து கற்களை உண்டாக்கின்றது. இதனால் போதிய அளவு குடிநீர் அருந்துதல், தகுந்த உணவு முறை மூலம் கற்கள் உற்பத்தியாவதை தடுக்க முடியும். சிறிய கற்களாக இருப்பின் வெளியேற்றவும் செய்யலாம். பெரிய கற்களாக இருப்பின் மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை செய்யலாம். இந்த அறுவை சிகிச்சை தனியார் மருத்துவமனைகள் அல்லது வெளியிடங்களில் செய்வதற்கு ரூபாய்50 ஆயிரம் முதல் ரூபாய் 80 ஆயிரம் வரை செலவு ஆகும். ஆனால் கிருஷ்ணகிரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்ள அதிநவீன கருவிகள் மூலம் சிறுநீரக கல் அகற்றுதல், சிறுநீரக அறுவை சிகிச்சை நிபுணர்களால் முற்றிலும் இலவசமாக செய்யப்படுகிறது. இதை பொதுமக்கள் பயன்படுத்தி கொண்டு பயன்பெற வேண்டுமென அவர் தெரிவித்தார்.