தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020 ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி பத்மநாபன் முன்பாக விசாரணைக்கு வந்தபோது வழக்கின் சாட்சியாக கோவில்பட்டி காவல் நிலைய காவலர் கருப்பசாமி ஆஜராகி சாட்சியம் அளித்தார். அப்போது ஜெயராஜ் உடலை பிரேத பரிசோதனை செய்யும் போது அவர் உடனிருந்த விவரங்கள் மற்றும் ஜெயராஜின் இரத்தம் தோய்ந்த உடைகளை வாங்கி நீதிபதியிடம் ஒப்படைத்த விவரங்களை சாட்சியமாக பதிவு செய்தார். இதனையடுத்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை 23ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
ராமநாதபுரம், அபிராமம் காவல்துறை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தாக்கல் செய்த மனு அபதாரத்தோடு தள்ளுபடி
ராமநாதபுரம், அபிராமம் பகுதியைச் சேர்ந்த அமுதா உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தாக்கல் செய்த மனு.அதில், "நான் பாப்பனம் பஞ்சாயத்து தலைவராக இருக்கிறேன். 2022 மார்ச் 1ஆம் தேதி மாசி திருவிழாவிற்காக முனியசாமி கோவிலுக்கு சென்றேன் அங்கு தேர்தல் முன்விரோதம் காரணமாக முனியசாமி என்பவர் எனது கணவரை தாக்கினார். இதில் எனது கணவருக்கு காயம் ஏற்பட்டது உடனடியாக கமுதி அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை அளிக்கப்பட்டது. இது சம்பந்தமாக அபிராமம் காவல்துறை ஆய்வாளர் எனது கணவர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். இதுகுறித்து காவல் ஆய்வாளரிடம் கேட்க சென்றபோது சாதிரீதியாக என்னை திட்டினார் இந்த சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்க கோரி உயர் அதிகாரிகளுக்கு மார்ச் 15ஆம் தேதி மனு செய்தேன் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. எனவே எனது மனு மீது பரிசீலனை செய்து அபிராமம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.இந்த மனு நீதிபதி எஸ்.எம். சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி பிறப்பித்த உத்தரவில்...
* சம்பவம் நடந்தது 2022 மார்ச் 1ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது 2022 மார்ச் 2-ஆம் தேதி குற்றவாளிகள் 2022 மார்ச் 5ஆம் தேதி கைது செய்யப்பட்டுள்ளனர்.
* 2 தரப்பிலும் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். விசாரணை நடைபெற்று வருகிறது. மனிதர்களை காவல்துறை ஆய்வாளர் திட்டியதாக கூறப்படுவது 2022 மார்ச் 2-ஆம் தேதி ஆனால் மனுதாரர் அதிகாரிகளுக்கு மனு செய்தது 2022 மார்ச் 15ஆம் தேதி 13 நாட்கள் தாமதமாக மனு அளிக்கப்பட்டுள்ளது. இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
* குற்றவாளிகளின் உறவினர்கள் காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க கூறி பல வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது.
* குறிப்பாக காவல்துறையினர் மீது உயர் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கக் கோரி பல மனுக்கள் தாக்கல் செய்யப்படுகிறது. இதனை நீதிமன்றம் ஆதரிக்காது.
* காவல் துறையினரின் மனநிலையை பாதிக்கவும், குற்ற செயல்களில் இருந்து தப்பிக்கவும், விசாரணையை தாமதப்படுத்தும் காவல்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படுகிறது.
* சில நேரங்களில் காவல் துறையினர் தனது அதிகாரத்தை மீறி பொதுமக்களிடம் நடந்து கொள்கின்றனர். அதனை சரியான முறையில் விசாரிக்க முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.
* இந்த வழக்கைப் பொறுத்தவரை 13 நாட்களுக்கு பின்பே அபிராமம் காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுதாரர் மனு செய்துள்ளார். இது அவர் மீது தனிப்பட்ட ரீதியான பகையின் காரணமாகவே மனு செய்யப்பட்டிருப்பது உறுதியாகிறது.
எனவே, மனுதாரருக்கு ரூபாய் 25 ஆயிரம் அபதாரம் விதிக்கப்படுகிறது. இதனை சம்பந்தப்பட்ட அபிராமம் காவல் ஆய்வாளருக்கு 2 வாரத்துக்குள் வழங்க வேண்டும்.அபிராமம் காவல் ஆய்வாளர் இதனை அபிராமம் காவல் நிலையத்திற்கு தேவையான பொருள்கள் வாங்கவும், பொது மக்களுக்கு செலவு செய்யவும் நீதிபதி உத்தரவிட்டார்.