கோவையில் யூடியூப் மூலம் அறிமுகமாகி, பார்வையாளர்களை ஃபோரெக்ஸ் டிரேடு முதலீடு செய்ய வைத்து 300 கோடி ரூபாய் வரை மோசடி செய்த ஆசாமியை கைது செய்யக்கோரி முதலீட்டாளர்கள் போராட்டம் நடத்தினர்.
கோவை சுந்தராபுரம் பகுதியைச் சேர்ந்த விமல்குமார். இவர் மிஸ்டர் மனி என்ற பெயரில் யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த சேனலில் அவ்வப்போது லைவ் வரும் விமல்குமார், கொரோனா ஊரடங்கு காலத்தில் பணத்தை ஃபோரெக்ஸ் டிரேடிங்கில் ( ஆன்லைன் வர்த்தகம்) முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என பேசி வந்திருக்கிறார்.
8 சதவீத வட்டி
இது மட்டுமன்றி, அதனை பார்க்கும் நபர்களை போனில் அழைத்து, நேரடியாக கூட்டம் நடத்தி, பணத்தை தன் மூலமாக முதலீடு செய்தால் மாதம் 8 சதவீதம் ஊக்கத்தொகையை வட்டியாக வழங்குவதாகவும் அவர் உறுதியளித்துள்ளார்.
மாவட்டம் தோறும் அலுவலகங்கள்
இதற்காக மாவட்டம் தோறும் ஆல்பா ஃபோரெக்ஸ் என்ற பெயரில் அலுவலகங்களை அமைத்து, அதற்கான முகவர்களை 50 ஆயிரம் ரூபாய் ஊதியத்தில் பணியமர்த்தி, அவர்கள் மூலம் பணத்தை திரட்டியுள்ளார்.
300 கோடி ரூபாய் வரை முதலீடு
இதையடுத்து மாநிலம் முழுவதிலிருந்து சுமார் 3000 த்திற்கும் மேற்பட்டோர் சுமார் 300 கோடி ரூபாய் அளவிற்கு முதலீடு செய்துள்ளனர். ஆனால் பணத்திற்கான வட்டித்தொகை நீண்ட நாட்களாக வராமால் இருந்த நிலையில், முகவர்களுக்கு சம்பளம் கொடுக்கவில்லை என தெரிய வந்தது. இதனால், சந்தேகமடைந்த முதலீட்டாளர்கள் விமல்குமாரையும், அவரது மனைவி ராஜேஸ்வரியை தொடர்பு கொள்ள முயன்றுள்ளனர்.
அப்போது அவர்களது மொபைல் சுவிட் ஆஃப்பாக இருந்ததாக சொல்லப்படுகிறது. அதனைத் தொடர்ந்து அவரை நேரில் சந்திக்க சென்ற போது, அவரது அலுவலகமும் மூடப்பட்டிருந்தது. இதனால் பணம் கொடுத்தவர்கள் தாங்கள் ஏமாற்றப்பட்டதை அறிந்தனர்.
இதையடுத்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த திருச்சி, ராமநாதபுரம், திருநெல்வேலி உள்ளிட்ட மாவட்டத்தை சேர்ந்த பாதிக்கப்பட்ட முதலீட்டாளர்கள், கண்டன முழக்கங்களை எழுப்பி, விமல்குமாரையும், ராஜேஸ்வரியையும் கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
அப்போது பேசிய அறிமுக நபரான முருகன் என்பவர், “தங்களை ஏமாற்றி விட்டு தலைமறைவானவர்களை கைது செய்து, பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என கோரிக்கை விடுத்தார். இதையடுத்து 5 பேரை மட்டும் ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க காவல்துறையினர் அனுமதி அளித்தனர்.