ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் வேலை வாங்கி தருவதாக கூறி 3 கோடி ரூபாய் பெற்று மோசடி செய்ததாக ராஜேந்திர பாலாஜி மீது புகார் எழுந்தது. இந்த வழக்கில் கடந்த சில நாட்களுக்கு முன் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கைது செய்யப்பட்டார். கடந்த டிசம்பர் மாதம் இவரின் முன் ஜாமீன் மறுக்கப்பட்ட நிலையில், ராஜேந்திர பாலாஜி தலைமறைவானார். இதனையடுத்து தீவிர தேடுதல் வேட்டை நடத்திய போலீசார், அவரை கடந்த ஜனவரி மாதம் கைது செய்தனர்.


ஜாமீன் வாங்கிய ராஜேந்திர பாலாஜி: 


இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்த ராஜேந்திர பாலாஜி அதன்பின் பெயிலில் வெளியே வந்தார்.




ஆனால் அவர் விருதுநகரிலேயே இருக்க வேண்டும், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன. அதேபோல் விருதுநகர் கிளை நீதிமன்றத்தில் இவரின் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. 


தீவிர விசாரணை


ஜாமீனில் வெளியே வந்த ராஜேந்திர பாலாஜி அதன்பின் கடந்த ஜனவரி மாதம் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். ஆனால் அப்போது ராஜேந்திர பாலாஜிக்கு கொரோனா இருந்தது. இதற்கான  சான்றிதழை அவர் விருதுநகர் குற்றப்பிரிவு போலீசாரிடம் காட்டினார். இதனால் அப்போது ராஜேந்திர பாலாஜி விசாரணைக்கு ஆஜர்படுத்தப்படவில்லை. அவர் குணமடைவதற்காக குற்றப்பிரிவு போலீசார் காத்து இருந்தனர்.




இந்த நிலையில் 3 நாட்களுக்கு முன் குணமடைந்த ராஜேந்திர பாலாஜி நெகட்டிவ் சான்றிதழை குற்றப்பிரிவு போலீசாரிடம் வழங்கினார். மருத்துவமனையில் வழங்கிய நெகட்டிவ் சீட்டோடு விருதுநகரில் உள்ள குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்தில் ராஜேந்திர பாலாஜி ஆஜர் ஆனார். அவரிடம் நேற்று மதியம் தொடங்கிய விசாரணை இரவு வரை தீவிரமாக நடத்தப்பட்டது. 11 மணி நேரம் இந்த விசாரணை நடத்தப்பட்டது.


கேள்விகளால் துளைத்தெடுத்த அதிகாரிகள்: 


மொத்தம் 130 -134 கேள்விகள் ராஜேந்திர பாலாஜியிடம் கேட்கப்பட்டது. ஆவின் துறையில் வேலை வாய்ப்பு தருவதாக கூறி ஏமாற்றியது எப்படி? விஜய நல்லதம்பியுடன் முதலில் பேசியது எப்போது? அவருடன் நெருக்கம் ஆனது எப்படி? என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் ராஜேந்திர பாலாஜியிடம் நேற்று கேட்கப்பட்டது.


இதில் சில கேள்விகளுக்கு ராஜேந்திர பாலாஜி பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. விருதுநகரில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்காக அதிமுகவினர் தீவிரமாக தேர்தல் பணிகளை செய்து வரும் நிலையில் ராஜேந்திர பாலாஜி நாள் முழுக்க விசாரணையில் இருந்தது அதிமுகவினர் இடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதிகாரிகள் கேட்ட கேள்விகளுக்கு ராஜேந்திர பாலாஜி திக்குமுக்காடி போனதாக தெரிகிறது. 


 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண