மருத்துவ குணம் கொண்ட ஆத்தூர் வெற்றிலை, புகையிலை பொருட்களால் மறக்கப்பட்டது என வெற்றிலை விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.
 

தமிழகத்தில் மதுரை, தஞ்சை, கும்பகோணம், சேலம் உள்ளிட்ட பகுதிகளில் வெற்றிலை விவசாயம் நடைபெற்று வந்தாலும் தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் சுற்றுவட்டாரத்தில் விளைவிக்கப்படும் வெற்றிலைக்கு தனிமவுசு உண்டு. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புவரை சுமார் 1000 ஏக்கரில் செய்யப்பட்ட வெற்றிலை விவசாயம் தற்போது 400 ஏக்கரில் செய்யப்பட்டு வருகிறது. தற்போது வெற்றிலை விவசாயத்தில் 2 ஆயிரம் ஈடுபட்டு உள்ளனர். ஆத்தூரில் இருந்து தமிழகம் மட்டுமல்ல ஜெய்ப்பூர், உத்திரபிரதேசத்தின் சில பகுதிகள், ஆந்திரா, மத்திய பிரதேசம் வரை தினந்தோறும் வெற்றிலை அனுப்பப்பட்டது. சீசன் காலங்களில் 5 ஆயிரம் கிலோ வெற்றிலையும் பிற நேரங்களில் 2 ஆயிரம் கிலோவும் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. நாட்டுக்கொடி, கற்பூரம், திருகாமணி என பலவகை இருந்தாலும் நாட்டுக்கொடியே இப்பகுதியில் சாகுபடி செய்யப்படுகிறது. விளைச்சலை பொறுத்து கொழுந்து, சக்கை, மாத்து, ராசி மற்றும் சன்னம் என தனித்தனி ரகங்களாக பிரிக்கப்படுகிறது. அகத்தியில் வெற்றிலை கொடி, முருங்கையில் கொடி படர்வதாலும் ஆமணக்கு, முள்முருங்கை வேலி பயிராக இருப்பதால் பூச்சி தாக்குதல் இருக்காது. 

பாட்டிமார் கை வைத்தியத்தில் வெற்றிலை முக்கிய பங்காக இருந்தது. குழந்தைகளில் சளி தொல்லைக்கு வெற்றிலை முக்கிய பங்குபெறுகிறது. நீர்ச்சத்து நிறைந்த வெற்றிலை,  குழந்தைகளின் மார்புச்சளிக்கு வெற்றிலையை விளக்கில் சூடுபடுத்தி, மார்பிலும் முதுகிலும் ஒத்தடம் கொடுக்க சளித்தொல்லை குறையும், நுரையீரல் தொற்றுக்கு வெற்றிலை சாறு, இஞ்சி சாறு சம அளவு கலந்து பருகினால் நோய் குறையும், குழந்தையின்மைக்கு வெற்றிலை கொடியின் வேர் பகுதி பயன்படுவதாக நம்பப்படுகிறது.
 
 சர்க்கரை நோய்க்கு இரண்டு வெற்றிலையுடன் ஒரு கைப்பிடி வேப்பிலை, கைப்பிடி அருகம்புல் மண்சட்டியில் 500 மிலி தண்ணீரில் போட்டு 150 மிலி ஆகும் வரை  கொதிக்க வைத்து ஆறியவுடன் வடிகட்டி ஒரு வேளைக்கு 50 மில்லி அருந்திவர நோய் தீரும். நீர் பெருக்கத்திற்கு வெற்றிலை சாருடன் பால் கலந்து அருந்தி வர சிறுநீர் நன்றாக பிரியும், தாய்ப்பால் சுரக்க  வெற்றிலை முக்கியமாக இருக்கிறது என நம்பப்படுகிறது. இப்படி பல மருத்துவ குணங்கள் கொண்டதாக பெரும்பான்மையினரால் நம்பப்படும் வெற்றிலையின் பயன்பாடு குறைந்து வருகிறது.
 
தற்போது இளைஞர்கள் முதல் அனைவரிடமும் புகையிலை பொருட்கள் பயன்பாட்டின் காரணமாக இந்தப்பழக்கம் குறைந்து வருவதாக கூறும் விவசாயிகள், திருமண விழாக்களில் தாம்பூல அழைப்பு விடுக்கப்படும் முறை இருந்தது. தற்போது அதுவும் முற்றிலும் மறைந்து போனதாக கூறும் ஆத்தூர் வட்டார வெற்றிலை விவசாயிகள் சங்க எழுத்தர் சுப்பிரமணியம், அஜீரணம் முதல் அனைத்து நோய்களுக்கும் நிவாரணியாக விளங்கும் வெற்றிலை, விருந்தோம்பலில் முக்கிய பங்கு வகித்தது. நாளடைவில் திருமண நிகழ்ச்சியில் பஞ்சு மிட்டாயும் ஐஸ்க்ரீமும் முக்கியத்துவம் பெறுவது வருத்தம் அளிக்கிறது எனவும், ஆத்தூர் வெற்றிலைக்கு புவிசார் குறியீடு (geographical Index) கிடைக்க வேண்டும் என்கின்றனர்.