கொல்கத்தாவில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டதை கண்டித்து (நாளை) ஆகஸ்ட் 17-ம் தேதி  நாடு முழுவதும் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தை இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்திருந்தது. நாடு தழுவிய போராட்டத்தில் தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் பங்கேற்க இருப்பதாக அறிவித்துள்ளது. 


பெண் பயிற்சி மருத்துவர் கொலை:


கொல்கத்தாவில் உள்ள பிரபல ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையின் செமினார் ஹாலில் இருந்து பயிற்சி மருத்துவர் ஒருவரின் இறந்த உடல் கண்டெடுக்கப்பட்டது. அவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், உயிரிழந்த பெண் மருத்துவருக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று மருத்துவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இந்த அதிர்ச்சி சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை இன்னும் எடுக்கப்படாத நிலையில், நாடு முழுவதும் 24 மணி நேர வேலை நிறுத்தப் போராட்டம் நாளை (17.08.2024) நடைபெறுகிறது. ஆகஸ்ட் 17 அன்று காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.


தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கம் அறிவிப்பு:


பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது கொலைக்கு நியாயம் கேட்டு நாளை நடைபெறும் 24 மணி நேர வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்கத்தின்(TNGDA) மாநில செயற்குழு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதில் மாநில தலைவர் டாக்டர் கே.செந்தில் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் டாக்டர் ஸ்ரீநிவாசன் முன்னிலை வகித்தார். இந்தக் கூட்டத்தில்  இந்த கொடூரமான கொலை குறித்தும் போராட்டம் குறித்தும் விவாதிக்கப்பட்டது. இந்த போராட்டத்தில்  இந்திய மருத்துவக் கழக (IMA) மருத்துவர்கள், மருத்துவ கல்லூரி மாணவர்கள்,  பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் ஆகியோர்களை சேர்த்து ஒன்றாக போராட முடிவு செய்யப்பட்டது.


தமிழ்நாடு அரசு மருத்துவர்கள் சங்க போராட்டத்தில் முன் வைக்கப்படும் கோரிக்கைகள் பற்றிய விவரம்:



  • கொல்கத்தா பெண் மருத்துவர் கொலையில் நேர்மையான விசாரணை மற்றும் நியாயம் கிடைக்க வேண்டும்.

  • தேசிய மருத்துவர் மட்டும் மருத்துவமனை பாதுகாப்பு சட்டம் உடனடியாக கொண்டு வர வேண்டும். 

  • தமிழகத்தில் அரசு மருத்துவர்கள் பணிபுரியும் இடங்களில் குறிப்பாக இரவு நேரத்தில் தங்குமிடம் போதிய வசதிகளும் பாதுகாப்பும் இல்லாமல் இருக்கிறது. இதோடு சேர்ந்து பயிற்சி மருத்துவர்கள், பட்ட மேற்படிப்பு மருத்துவர்கள் இரவு நேர பணிக்கு தங்குமிடங்கள் பெரும்பாலும் நல்ல நிலையில் இல்லை, பாதுகாப்பும் இல்லாமல் இருக்கிறது.

  • எனவே தமிழக அரசிடம் அரசு மருத்துவர்களுக்கும், (Medical College Hospitals, Govt Hospitals, PHCs ஆகியவற்றில் பணி புரிபவர்கள்) மேலும் பயிற்சி மற்றும் பட்ட மேற்படிப்பு மருத்துவர்களுக்கும், மருத்துவமனைகளில் உரிய வேலை ஷிப்ட், தங்கும் இடம் வழங்க வேண்டும், பாதுகாப்பு உறுதி செய்யப்பட வேண்டும்.