சேலம் மாவட்டத்தில் பட்டு வளர்ச்சித் துறையின் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் 100க்கும் மேற்பட்ட அரசு பணியாளர்கள் பணியாற்றி இருக்கின்றனர். இந்த நிலையில் சேலத்தில் உள்ள தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் 13 பெண்கள் உட்பட 25 ஊழியர்களை பணியிட மாற்றம் செய்த அரசு உத்தரவிட்டுள்ளது. இதனை திரும்பப் பெற வேண்டும் இல்லையென்றால் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபடுவோம் என தமிழ்நாடு பட்டு வளர்ப்பு துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மேலும், இதனை மனுவாக சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதல்வர் தனிப்பிரிவு உள்ளிட்டவருக்கு அனுப்பி உள்ளதாகவும் தெரிவித்தனர்.


இதுகுறித்து பேசிய பட்டு வளர்ச்சி துறை அலுவலர் சங்கத்தின் தலைவர் பெரியசாமி, குறிப்பாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள் 300 கிலோ மீட்டருக்கு மேலாக உள்ள உடுமலைப்பேட்டை, தாளவாடி, ஓசூர், தேனி போன்ற இடங்களில் பணிபுரிய தமிழக அரசு கடந்த 8 தேதி பணியிட மாறுதல் செய்து அறிவிப்பு வெளியிட்டது. இந்த நிலையில் பணியிட மாறுதல் செய்யப்பட்ட பணியாளர்கள் அனைவரும் தங்களின் குழந்தைகளுக்கு கல்வி கட்டணம் செலுத்தப்பட்டு மூன்று மாதங்களாக பள்ளிக்கு சென்று வருகின்றனர். பெண் பணியாளர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். 



மேலும் சில மகளிர் இயற்கை நோயினால் மருத்துவ சிகிச்சையிலும் உள்ளனர். பொதுவாக பணியிட மாறுதல்கள் சூழ்நிலை கருதி ஏப்ரல் மே மாதங்களில் நடைபெறும். ஆனால் பட்டு வளர்ச்சி நிர்வாகம் பணியாளர்களை பழிவாங்கும் நோக்கோடு பணியாளர்களின் நலனில் அக்கறை இல்லாமல் இடமாறுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளாக 856 பணியிடங்களில் சுமார் 546 க்கு மேற்பட்ட இளநிலை ஆய்வாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன 856 பணியாளர்கள் செய்ய வேண்டிய பணிகளை களப்பணியில் ஈடுபட்டு வரும் சுமார் 205 பணியாளர்களின் மீது சுமத்தப்பட்டு பெண் பணியாளர்களை துன்புறுத்தி வருகின்றனர். எனவே உடனடியாக இடம் மாறுதலை ரத்து செய்ய வேண்டும் இல்லை என்றால் அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தவும் பட்டு வளர்ச்சி நிர்வாகத்தின் மீது நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரவும் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.