சேலத்தில் கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு குறித்து முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் கார் ஓட்டுநர் கனகராஜன் சகோதரர் தனபால் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜெயலலிதா கார் ஓட்டுநராக இருந்த கனகராஜ் எனது சகோதரர் என்பதால் இந்த வழக்கில் சுதாகர் ஐஜி மூலமாக தன்னிடம் விசாரணை நடத்தினர். சிபிசிஐடி காவல்துறையினர் என்னை அழைத்து விசாரிக்கவில்லை, விசாரித்தால் அனைத்து உண்மைகளும் வெளியே சொல்ல தயாராக இருக்கிறேன். கோடநாடு வழக்கில் எடப்பாடி பழனிசாமி குறித்து தொடர்ந்து குற்றச்சாட்டு சொல்லி வருகிறேன். ஆனால் இதுவரை அரசு விசாரிக்கவில்லை கனகராஜ் இறப்பு குறித்து பலமுறை தெரிவித்தும், எடப்பாடி பழனிசாமியிடம் அரசு விசாரணை நடத்தவில்லை.


கோடநாடு பங்களாவிலிருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறி தான் ஆவணங்கள் அனைத்தும் எடுத்துவரப்பட்டது என்று கனகராஜ் என்னிடம் கூறினார். எனது உயிருக்கு எப்பொழுது வேண்டுமானாலும் ஆபத்து வரலாம் என்று என்னிடம் கூறியிருந்தார். 



இந்த நிலையில் ஆத்தூரில் கனகராஜ் இறந்தது விபத்துல்ல, திட்டமிட்டு விபத்தாக ஜோடித்துவிட்டனர். கோடநாடு பங்களாவில் இருந்து எடப்பாடி பழனிசாமி கூறி தான் சொத்து ஆவணங்களை எடுத்து வந்தார். அவர் கூறி தான் எடுத்து வந்ததாக தன்னிடம் கூறினார். எனது உயிருக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. தனியாக நடமாட முடியவில்லை, தமிழக அரசு முழுமையாக பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.


மேலும், கோடநாடு வழக்கு குறித்து காவல்துறையிடம் முழுமையான தகவல்களை தர தயாராக இருக்கிறேன். கனகராஜியின் செல்போன் யாரால் அழிக்கப்பட்டது என்று காவல்துறையினர் என்னிடம் கேட்டனர். ஆனால் கனகராஜியின் செல்போனை எடப்பாடி காவல் நிலைய ஆய்வாளராக இருந்த சுரேஷ் குமார் என்பவர் தான் இரண்டு செல்போன்களையும் எடுத்துச்சென்று அழித்துவிட்டார். அதை வெளியே யாரிடமும் சொல்லக்கூடாது என்று காவல்துறை ஆய்வாளர் என்னிடம் கூறியிருந்தார். குறிப்பாக எடப்பாடி காவல் ஆய்வாளர் சுரேஷ்குமார் எடப்பாடி பழனிசாமியின் பினாமியாக செயல்பட்டார். மேலும் சிபிசிஐடி விசாரணையில் எதுவும் சொல்லக்கூடாது என்று எடப்பாடி ஆய்வாளர் என்னை மிரட்டிவிட்டார். மேலும் சிபிசிஐடி விசாரணையில் அந்த செல்போனை காவல் ஆய்வாளரிடம் தான் கொடுத்ததாக தெரிவித்தேன். அப்பொழுது உயிர் மீது பயம் இருந்தால் எதையும் வெளியே கூறவில்லை. தற்பொழுது தமிழக முதல்வர் மீது நம்பிக்கை உள்ளது, அவர் உரிய பாதுகாப்பு எனக்கு தருவார் என்று நம்பிக்கையில் அனைத்து உண்மைகளையும் வெளியே சொல்லியுள்ளேன்.



கனகராஜ் எடுத்து வந்த ஆவணங்கள் குறித்து காவல்துறையிடம் சொல்ல தயாராக உள்ளேன், வாய்ப்பு கிடைத்தால் முதல்வரை நேரில் சந்தித்து அனைத்து உண்மைகளும் சொல்ல தயாராக இருக்கிறேன். தன்னிடம் வேறு எந்த ஆதாரமும் இல்லை இறந்த கனகராஜ் கூறிய தகவல் மட்டும் தான். அப்போது ஈரோடு பெருந்துறையில் கனகராஜ் 5 பைகளை தன்னிடம் காண்பித்தார். அப்போது கனகராஜியுடன் சையனும் இருந்தார். இதுதொடர்பாக பெருந்துறை சென்றிருக்கும்போது நேரில் என்னை அழைத்து காண்பித்தார். இதில் மூன்று பைகள் சங்ககிரிக்கும், இரண்டு பைகள் சேலத்திலும் கொடுக்கப்பட்டது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் நிறைய பேர் உள்ளனர். இதுகுறித்து முழுமையாக காவல்துறையிடம் மட்டுமே கூறமுடியும், வெளியே கூறினால் என் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் தெரிவித்தார். கோடநாடு சம்பவம் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தான் அவர் கூறி தான், செய்ததாக கனகராஜ் தன்னிடம் கூறியதாக பேசினார். சிபிசிஐ காவல்துறையினர் இதுவரை என்னை விசாரிக்கவில்லை, இதற்கு முன்பு தன்னை கைது செய்தது தமிழ்நாடு காவல்துறையினர் தான். தமிழ்நாடு காவல்துறையினர் கஸ்ட்டியில் எடுத்து விசாரித்தபோது நிறைய தகவல்களை கூறியிருந்தேன். ஆனால் ஆவணங்களில் எந்தெந்த தகவல்களை ஏற்றினார்கள் என்பது குறித்து எனக்கு தெரியவில்லை. எனது உயிருக்கு பாதுகாப்பு வழங்கவேண்டும் என்று முதல்வருக்கு வேண்டுகோள் விடுகிறேன்.


கனகராஜ் அந்தளவுக்கு செல்லமாட்டார் என்று நம்பிக்கை இருந்தது. அவரை எப்படி எடப்பாடி பழனிசாமி மனமாற்றம் செய்தார் என்று தெரியவில்லை என்றும் கூறினார். இதை தொடர்ந்து பேசியவர், நிலமோசடி வழக்கில் தன்னை போலியாக கைது செய்துள்ளனர். இந்த வழக்கிலிருந்து தன்னை விடுவிக்க மேச்சேரி காவல் ஆய்வாளர் சண்முகம் ரூ.10 லட்சம் பணம் கொடுக்கும்படியும் கேட்டார். இது மட்டுமில்லாமல் காவல் நிலையத்தில் வைத்து காவல்துறையினர் கம்பியால் கடுமையாக தாக்கினர். மேலும் தனது பல்லை காவல்துறையினர் பிடுங்கிதாகவும் குற்றம்சாட்டினர். மேலும் ஜாமீனுக்கான சான்றிதழ் வழங்க தனது உறவினர்களிடம் ரூ.50 ஆயிரம் வரை லஞ்சமாக பணத்தை பெற்றுள்ளார் என்றும் குற்றம்சாட்டினார்.