பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் இருக்கிறது. குறிப்பாக, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் தொடர்ந்து அதிகரித்து வந்துள்ளது. இதை தடுக்க, மத்திய, மாநில அரசுகள் தொடர் நடவடிக்கை எடுத்தபோதிலும், இதற்கு முற்றுப்புள்ளி வைத்தபாடில்லை.


பாலியல் வன்கொடுமை வழக்குகளில் நீதிமன்றம் விரைந்து தீர்ப்பளிக்க வேண்டும். அப்படி நடந்தால்தான், குற்றம் குறையும் என பல்வேறு தரப்பினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அதற்கு ஏற்றார்போல் கொடைக்கானல் நீதிமன்றம் குற்றம் நடந்த 10 நாள்களில் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 


நான்கே நாள்களில் தீர்ப்பு:


பாலியல் வன்கொடுமே வழக்கு வரலாற்றில் அதிவேகமாக விசாரணை செய்து குற்றம்சாட்டப்பட்ட இரண்டு பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. விசாரணை தொடங்கப்பட்டுள்ள நாள்கே நாள்களில் தீர்ப்பு வழங்கி நீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது.


தீர்ப்பு குறித்து அரசின் உதவி வழக்கறிஞர் சி. குமரேசன், தனியார் செய்தி நிறுவனத்திடம் பேசுகையில், "இது நிச்சயமாக மாநிலத்தில் வேகமான நடத்தப்பட்ட வழக்கு. நாட்டிலேயே நடத்தப்பட்ட வேகமான வழக்கு விசாரணையாக கூட இருக்கலாம்" என்றார்.


நடந்தது என்ன?


கொடைக்கானலில் உள்ள கூக்கால் கிராமத்தில் ரிசார்ட் நடத்தி வரும் பாதிக்கப்பட்ட 28 வயது பெண், பிப்ரவரி 4ஆம் தேதி இரவு 7 மணியளவில் எஸ்யூவி வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, லிப்ட் கேட்பது போல கேட்டு, அவரது எஸ்யூவி வாகனத்தை மறித்த இருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியுள்ளனர். 


நல்வாய்ப்பாக, வழிப்போக்கர்களால் பாதிக்கப்பட்ட பெண் சிறிது நேரத்தில் காப்பாற்றப்பட்டார். மறுநாள் வழக்குப் பதிவு செய்த போலீஸார், கொடைக்கானலைச் சேர்ந்த கே.ஜீவா (22), என்.பாலமுருகன் ஆகிய இருவரையும் கைது செய்து, பிப்ரவரி 7ஆம் தேதி, மாஜிஸ்திரேட் முன்பு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.


வழக்கின் விசாரணை பிப்ரவரி 10 ஆம் தேதி தொடங்கியது. பிப்ரவரி 13 ஆம் தேதி, குற்றம் சாட்டப்பட்டவருக்கு 7 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தார் மாஜிஸ்திரேட் கே. கார்த்திக்.


இந்திய தண்டனை சட்டம் பிரிவு 323 (காயத்தை ஏற்படுத்தியது), பிரிவு 354(பாலியல் வன்கொடுமை), தமிழ்நாடு பெண்கள் துன்புறுத்தல் தடை சட்டம் பிரிவு 4 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.


அரசுத் தரப்பு வழக்கறிஞரின் வாதத்தின்படி, "பாதிக்கப்பட்ட பெண் கொடைக்கானலில் இருந்து தனது ரிசார்ட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது இரவு 7 மணியளவில் இந்த சம்பவம் நடந்தது. இரு சக்கர வாகனத்தில் அவரது எஸ்யூவி பின்னால் சென்ற குற்றவாளிகள், அதை இடைமறித்து, தங்கள் பைக்கில் பெட்ரோல் தீர்ந்துவிட்டதாகக் கூறி, லிப்ட் கொடுக்குமாறு கோரினர். 


பெண் மறுத்ததால், இருவரும் அவரை பாலியல் ரீதியாக துன்புறுத்திவிட்டு வாகனத்தில் ஏறினர். அவர்கள் அவருடைய தலைமுடியை இழுத்து உடல் ரீதியாக தாக்கி காயங்களை ஏற்படுத்தினார்கள். அப்பகுதி மக்கள் அந்தப் பெண்ணைக் காப்பாற்ற வந்தபோது, ​​இருவரும் தங்கள் இருசக்கர வாகனத்தில் (TN 58 BW 3936) தப்பிச் சென்றனர்"