சென்னை கீழ்ப்பாக்கத்தில், இறந்த சிசுவின் சடலத்தை துணி சுற்றாமல் ஒப்படைத்த பிணவறை உதவியாளர் பன்னீர் செல்வம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். 


சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் டிசம்பர் 5ம் தேதி குழந்தை இறந்து பிறந்துள்ளது. அதனால் பெற்றோர்களிடம் குழந்தையின் உடல் நேற்று ஒப்படைக்கப்பட்டது. முன்னதாக  உயிரிழந்த குழந்தையின் உடலை  பிணவரை உதவியாளர் சரியாக மூடப்படாமல் பெற்றோர்களிடம் வழங்கியதாக புகார் எழுந்தது. அதன் அடிப்படையில் பிணவறை உதவியாளர் பன்னீர்செல்வம் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். சிசு சடலம் ஒப்படைப்பில் அலட்சியம் என்ற புகாரை விசாரிக்க 3 பேராசிரியர்கள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மறு உத்தரவு வரும் வரை பணி இடைநீக்கத்தில் இருப்பார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


என்ன நடந்தது..? 


வடசென்னை புளியந்தோப்பை சேர்ந்த மசூத் - சௌமியா தம்பதிக்கு பிறந்த குழந்தை இறந்த நிலையில், நேற்று குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. குழந்தையின் தாயார் சௌமியா கர்ப்பமாக இருந்த நிலையில், புயல் நாளான டிசம்பர் 5ம் தேதி பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது, அவரது கணவர் மற்றும் உறவினர்களால் அவரை சரியான நேரத்திற்கு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியவில்லை. 


குழந்தையின் தந்தை மசூத் டிசம்பர் 5ம் தேதி ஆம்புலன்ஸ் தேடவும், தனது மனைவியை மருத்துவமனைக்கு அழைத்து செல்லவும் கடுமையாக போராடினார். ஆனால், இறுதிவரை கிடைக்கவில்லை. இதையடுத்து, பக்கத்து வீட்டுக்காரர்கள் தாயை சைக்கிள் ரிக்‌ஷாவில் பக்கத்தில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அந்த மருத்துவமனையின் கதவுகள் பூட்டப்பட்டிருந்ததால், பெரம்பூரில் உள்ள முத்து மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது. அடுத்ததாக கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் முயற்சித்தபோது, ​​மருத்துவர்கள் முதலில் மறுத்துள்ளனர். ஆனால் இறுதியில் காவல்துறை தலையிட்ட பிறகு தாய்க்கு சிகிச்சை அளித்தனர். அப்போது, குழந்தை இறந்தே பிறந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


அங்கிருந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் உள்ள பிணவறைக்கு அனுப்பப்பட்டநிலையில், மருத்துவமனையின் பிணவறை ஊழியர்கள் குழந்தையை தகனம் செய்ய 2,500 ரூபாய் செலுத்த வேண்டும் என்று  வலியுறுத்தியுள்ளனர். அப்படி, பணம் செலுத்த முடியாவிட்டால், மகளின் உடலை எடுத்துச் செல்லுமாறு மருத்துவமனை ஊழியர்கள் குழந்தையின் தந்தையிடம் கூறியதாக கூறப்படுகிறது. குழந்தையை புதைக்க தன்னிடம் பண வசதி இல்லை என்றும், தகனம் செய்வதற்கு மருத்துவமனைக்கு பணம் இல்லை என்றும் குழந்தையின் தந்தை தெரிவித்தார். தொடர்ந்து,  இறந்து நான்கு நாட்களுக்குப் பிறகு, பிணவறையில் குழந்தையின் உடல் என்ன நிலையில் உள்ளது என்றே தெரியவில்லை என்று வேதனை அடைந்தார். 


இதையடுத்து, தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் (TMMK) தலையீட்டிற்குப் பிறகு, டிசம்பர் 10 ஆம் தேதி குழந்தையின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. மருத்துவமனை நிர்வாகத்தின் விதிமுறைகள்படி, துணி கூட சுற்றாமல் குழந்தையின் உடலை ஒரு அட்டைப் பெட்டியில் அடைத்து கொடுத்துள்ளனர். இந்த சூழலில்தான் இந்த செய்தி சமூக வலைதளங்களில் வைரலானதை தொடர்ந்து, பிணவறை ஊழியர் பன்னீர்செல்லம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.