பூஜை செங்கல்லை எட்டி உதைத்ததாகத் திமுக எம்.பி. செந்தில் குமார் மீது சர்ச்சை கிளம்பியதை அடுத்து, புகார் தெரிவித்த சுமந்த் சி ராமன் மீது போலீஸ் புகார் அளித்துள்ளதாக எம்.பி. தெரிவித்துள்ளார். நடந்த சம்பவம் குறித்து விளக்கமும் அளித்துள்ளார்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், அதியமான் கோட்டை ஊராட்சி, செய்தி மக்கள் தொடர்புத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள வள்ளல் அதியமான் கோட்டவளாகத்தில் ரூ.49 லட்சம் மதிப்பீட்டில் நவீன நூலகம் கட்டும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் சாந்தி நேற்று (22.09.2022) தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில்குமார் , தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஷ்வரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். அவர்களுடன் மாவட்ட ஊராட்சிக்குழுத் தலைவர் யசோதா, துணைத் தலைவர் சரஸ்வதி, நல்லம்பள்ளி ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மகேஸ்வரி மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தருமபுரி திமுக எம்.பி. செந்தில்குமார், பூஜைக்காக மஞ்சள்,குங்குமம் பூசப்பட்டிருந்த செங்கற்களை எட்டி உதைத்ததாக செய்திகள் வெளியாகின.
இதை மேற்கோள் காட்டி, அரசியல் விமர்சகரும் மருத்துவருமான சுமந்த் ராமன் ட்வீட் செய்திருந்தார். அந்தப் பதிவில்,'' முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வீழ்த்துவதற்காக திமுகவுக்கு உள்ளேயே ஒரு குழு வேலை செய்து கொண்டிருக்கிறது. திமுக எம்.பி. செந்தில்குமார் அவர்களே, செங்கற்களில் குங்குமம் அல்லது மஞ்சள் இருக்கக்கூடாது என்று நினைத்திருந்தால், முன்பே தெரிவித்திருக்க வேண்டும். இந்து சமய நம்பிக்கைகளை இவ்வாறு அவமதிப்பது சரியல்ல'' என்று கூறி இருந்தார்.
இதற்கு பதிலளித்துள்ள செந்தில் குமார் எம்.பி., ''உங்களுக்குத் துளியேனும் வெட்கம் இருந்தால் ட்வீட்டை அழித்துவிட்டு, மன்னிப்பு கேளுங்கள். அரசு மக்கள் தொடர்பு நிறுவனம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ இதுதான்.
இதைத் தாண்டியும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், மாவட்ட ஆட்சியர் மற்றும் பாமக எம்எல்ஏ வெங்கடேசனைக் கேளுங்கள். பெண்களுக்கு இடம் தருவதற்காக நகர்வது என்பது செங்கல்லை உதைப்பதாக ஆகாது. இதுகுறித்து காவல் துறையிலும் புகார் அளித்துள்ளேன்'' என்று தெரிவித்துள்ளார்.