தென்னிந்தியாவை மையப்படுத்தி ’தெற்கின் எழுச்சி’ என்ற பெயரில் “ABP Southern Rising Submit 2023“ என்னும் பிரம்மாண்ட கருத்தரங்கு, சென்னையில் உள்ள தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழக அமைச்சர்களான உதயநிதி ஸ்டாலின், பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன், எம்.பி.க்கள் கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி, ஜான் பிரிட்டாஸ், முன்னாள் எம்.பி. ராஜீவ் கவுடா, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நடிகர் ராணா டகுபதி, நடிகைகள் ரேவதி, சுஹாசினி, தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு உள்பட பலரும் பங்கேற்றனர்.
இதைத் தொடர்ந்து குஷ்பு 'ஏபிபி நாடு’க்கு அளித்த சிறப்புப் பேட்டி:
நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக- பாஜக கூட்டணியில் ஏற்பட்டுள்ள விரிசல் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்கள்?
எங்களுடைய மாநிலத் தலைவர் அண்ணாமலை இது குறித்து பேசுவார்.
உங்களுடைய பதில் என்னவாக இருக்கிறது?
ஒவ்வொருவரும் கருத்து சொல்லித்தான் பிரச்சினை ஆரம்பிக்கிறது (சிரிக்கிறார்). அதனால் தலைவர்கள் அவர்களுடைய தலைமையில் பேசிவிட்டால், சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.
இந்தியா கூட்டணி எப்படி செயல்படுகிறது என்று நினைக்கிறீர்கள்? உங்களுடைய கூட்டணி எப்படி இருக்கிறது?
இந்தியா கூட்டணி இப்போதுதான் தொடங்கப்பட்டிருக்கிறது. உள்ளுக்குள்ளேயே சண்டை போய்க் கொண்டிருக்கிறது. மேற்கு வங்காளமும் கேரளமும் வேறு வேறு பாதையில் போய்க் கொண்டிருக்கின்றன. ஒரு மாநிலத்தில் கூட்டணியுடனும் மற்றொரு மாநிலத்தில் தனித்தனியாகவும் இருக்கிறார்கள். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு இருக்கிறது. சமாஜ்வாடி கூட்டணி எப்படி இருக்கிறது என்றே தெரியவில்லை. பிரதமர் மோடிக்கு எதிரான முகம் இவர்தான் என்று அவர்கள் முதலில் முடிவு செய்துவிட்டுச் சொல்லட்டும்.
நாட்டில் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் எதிரான குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. இதை தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக எப்படிப் பார்க்கிறீர்கள்? இவற்றை எப்படித் தடுக்கலாம்?
இதைத் தடுப்பது எங்கள் கையில் இல்லை. ஆனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் வாங்கிக் கொடுப்பது எங்கள் கையில் உள்ளது. இதற்குப் பெண்கள் வெளியில் வந்து பேச வேண்டும். ஆனால், ’நாங்கள் புகார் அளிக்கிறோம். எங்களின் பெயர் அதில் இருக்கக் கூடாது. அதனால் எங்களுக்கு பிரச்சினை வந்து விடும்’ என்று சம்பந்தப்பட்டவர்கள் பயப்படுகிறார்கள். அந்த பயத்தை விடுத்து, வெளியில் வந்து குற்றவாளிகளைக் காட்டும்போதுதான் எங்களால் நடவடிக்கை எடுக்க முடியும். பெரும்பாலான நேரங்களில் இது நடப்பதில்லை.
இத்தகைய குற்றங்களைத் தடுக்க ஒவ்வொரு பெண்ணையும் பார்த்து, ’நீ ஏன் அங்கு சென்றாய்?’ ’அங்கே என்ன செய்தாய்?’ ’நீ எதற்காக அந்த ஆடை அணிந்தாய்?’ ’அந்த ஆணை என்ன தூண்டிவிட்டாய்?’ என்று பெண்களைப் பார்த்து மட்டுமே கேள்வி எழுப்பிக் கொண்டிருக்கிறோம். ஆண்களை பார்த்து ’நீ ஏன் இப்படிச் செய்தாய்?’ என்று ஒரு கேள்வி கூட கேட்பது இல்லை. எப்போது நம்மை நாமே மாற்றிக் கொள்கிறோமா அப்போதுதான் இவை அனைத்தையும் தடுக்க முடியும்.
பெண்களிடம் அதைச் செய்யாதே, இதைப் பார்க்காதே; அங்கே போகாதே, அப்படி இருக்காதே என்று சொல்வதை விட, ஆண்களிடம் ’வீட்டில் பெண்களை எப்படி மதிக்கிறாயோ அதேபோல வெளியில் பெண்ணை மதிக்க வேண்டும்’ என்று கற்றுக் கொடுக்க வேண்டும். பெண் என்பவள், பொருள் கிடையாது. அவளுக்கு உயிர் இருக்கிறது, ரத்தம், இதயம் இருக்கிறது என்று கற்பிக்க வேண்டும்.
பெண்களுக்கு சொல்லிக் கொடுப்பதை விட ஆண்களுக்கு சொல்லிக் கொடுக்க வேண்டும். அவர்களுடைய வளர்ப்பு சரியாக இருந்தால், பிரச்சனைகளே இருக்காது.
பெண் அரசியல்வாதியாக என்ன சிக்கல்களை எதிர்கொண்டிருக்கிறீர்கள்? அதை எப்படித் தாண்டி வந்தீர்கள்?
அரசியல் ரீதியாக எந்த பிரச்சினைகளையும் நான் எதிர்கொண்டதில்லை. எந்தத் தொழிலில் இருந்தாலும் பெண்களுக்கு பிரச்சனைகள் இருக்கின்றன. அரசியலில், சினிமாவில், மருத்துவத் துறையில், கார்ப்பரேட் வேலையில் ஏன் படிக்கும்போதும் கூட பிரச்சனைகள் இருக்கின்றன. தாங்க வெற்றி கொண்டிருப்பார்கள் ஒரு பெண் நம்மைத் தாண்டி செல்லக்கூடாது. அவள் சொல்வதை நான் ஏன் கேட்க வேண்டும் என்ற மனநிலை எல்லா இடத்திலும் இருக்கிறது. அதை மாற்ற பல காலங்கள் ஆகும்.
பொதுவாக பெண்களுக்கு எதிராக எல்லாத் துறைகளிலும் அரசியல் இருக்கும். இந்த சூழலில் அரசியலில் என்ன மாதிரியான அரசியல் இருக்கிறது?
இங்கேயும் அதே அரசியல்தான் இருக்கிறது.
தலைவர்களைப் பற்றி ஓரிரு வார்த்தைகளில் சொல்லுங்களேன்..!
கலைஞர் கருணாநிதி - என்னுடைய ஆசான்
ஜெயலலிதா - தைரியமான பெண்
இந்திரா காந்தி - நல்ல தலைவி
ராகுல் காந்தி - இன்னும் கற்றுக்கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது.
நரேந்திர மோடி - நிரந்தரத் தலைவர்
அமித்ஷா - சாணக்கியர்
அண்ணாமலை - சிங்கம்
நடிகர் விஜய் - தளபதி