நடப்பாண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெறும் எனவும், அதற்கான ஒப்புதல் அளித்த ஒன்றிய அரசுக்கு நன்றி என்றும், முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


ஸ்டாலின் டிவிட்டர் பதிவு:


இதுதொடர்பாக ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் “நடப்பாண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை தமிழ்நாட்டில் நடத்துவதற்கான எனது கோரிக்கையை ஏற்றுக்கொண்டதற்காக, மாண்புமிகு பிரதமர் மோடிக்கு எனது நன்றிகள். இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும்  வரும் இளம் விளையாட்டு வீரர்களும்,  தங்கள் விளையாட்டு திறன்களை வெளிப்படுத்த இந்த விளையாட்டுகள் ஒரு தளமாக செயல்படும். 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியின் போது அனைவரும் கண்டது போல், தமிழ்நாடு கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளையும் தகுந்த கம்பீரத்துடன் நடத்தி, தமிழ் கலாச்சாரம் மற்றும் விருந்தோம்பலை வெளிப்படுத்தும்” என குறிப்பிட்டுள்ளார்.


முதலமைச்சர் வைத்த கோரிக்கை:


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கடந்த ஏப்ரல் மாதம் 8ம் தேதி அன்று சென்னை விமான நிலையத்தில் வைத்து பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து, மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். அதில் ”சர்வதேச பல்வகை விளையாட்டு போட்டிகளை நடத்துவதற்கான தமிழ்நாட்டின் தொலைநோக்குப் பார்வையைக் கருத்தில் கொண்டு. அடுத்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு தமிழ்நாடு அரசு தனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறது” என குறிப்பிட்டு இருந்தார். அந்த கோரிக்கையை ஏற்று தான், நடப்பாண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டை தமிழ்நாட்டில் நடத்த, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.


கேலோ விளையாட்டு:


கடந்த 2018ம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற முதல் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியை, பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். அதைதொடர்ந்து அடுத்தடுத்த ஆண்டுகளில்  மகாராஷ்டிரா, அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெற்றது. நான்காவது எடிஷன் ஹரியானாவிலும், கடந்த ஆண்டு மத்திய பிரதேசத்திலும் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. இதில் மகாராஷ்டிரா 3 முறையும், ஹரியானா இரண்டு முறையும் ஓவர் ஆல் சாம்பியன்ஷிப் பட்டத்தை கைப்பற்றியுள்ளது. இந்த சூழலில் தான் நடப்பாண்டிற்கான கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகளை, தமிழ்நாட்டில் நடத்த முதலமைச்சர் ஸ்டாலின் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.