கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் சின்னக்கானல், சாந்தம்பாறை மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் 'அரிக்கொம்பன்' என்று பெயரிட்டு அழைக்கப்படும் காட்டுயானை கடந்த சில ஆண்டுகளாக மக்களுக்கும், விவசாய நிலங்களுக்கும் தொடர்ந்து பாதிப்புகளை ஏற்படுத்தி வந்தது.


அரிக்கொம்பன்


கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் இந்த காட்டு யானை 8 பேரை கொன்றதுடன், ஏராளமான விளை பயிர்களையும் சேதம் செய்து வந்தது. இந்த காட்டு யானை கடந்த வாரம் கேரள வனத்துறையினரால் மயக்க ஊசிகள் செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் இந்த யானை பலத்த பாதுகாப்புடன் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டு, தேக்கடி பெரியாறு புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட மேதகானம் வனப்பகுதியில் விடப்பட்டது. தமிழக, கேரள மாநில எல்லையான இப்பகுதியில் யானையை விடும் முன்பு அதன் கழுத்தில் 'ரேடியோ காலர்' என்ற கருவி பொருத்தப்பட்டது. அதன் மூலம் யானையின் நடமாட்டம் இருக்கும் இடத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.


இந்த நிலையில் அந்த யானை மங்கலதேவி கண்ணகி கோவில் வழியாக தமிழக வனப்பகுதிக்குள் புகுந்தது. கடந்த சில தினங்களாக யானை மேகமலை, ஹைவேவிஸ் மலைப்பகுதியில் தஞ்சம் அடைந்தது. மூணாறில் இருக்கும் தேயிலை தோட்டங்கள் மற்றும் தட்பவெட்ப சூழல் போன்றே, ஹைவேவிஸ் மலைப்பகுதியும் திகழ்வதால் கடந்த சில நாட்களாக அந்த யானை இந்த மலைப்பகுதியிலேயே உலா வந்தது. இதனைத் தொடர்ந்து இந்த யானையின் நடமாட்டத்தை வனத்துறையினர் கண்காணித்து வந்தனர்.


குடியிருப்புக்குள் யானை:


இதற்கிடையே, கேரளாவில் இருந்து வந்த அரிக்கொம்பன் காட்டு யானை மீண்டும் கேரள பகுதிக்கு செல்லாமல் மேகமலை, ஹைவேவிஸ் பகுதியிலேயே உலா வந்தது. இதனால், பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் மேகமலை, ஹைவேவிஸ் மலைப்பகுதிக்கு வருவதற்கு வனத்துறையினர் தற்காலிக தடை விதித்திருந்தனர். இந்த சூழலில் நேற்று மாலை இந்த அரிக்கொம்பன் யானை தமிழக வனப்பகுதியான தேனி மாவட்டம் லோயர்கேம்ப் மலையடிவாரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்தது.


இந்த தகவல் தெரிந்த வனத்துறையினர் அப்பகுதிக்குட்பட்ட காவல் துறையினர் யானையை விரட்டுவது குறித்தும் யானையின் நடமாட்டம் குறித்தும் கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் இன்று காலை 5 மணிக்கு ஊருக்குள் அதாவது கம்பம் நகருக்கு ஒட்டியிருக்கும் விளை நிலங்களில் யானை சுற்றி திரிவதாக அப்பகுதியை சேர்ந்தவர்கள் கம்பம் தெற்கு காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் யானையின் நகர்வு குறித்து கண்டறிந்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்த நிலையில் வனத்துறையும் விரைந்து வந்து கண்காணித்துக்கொண்டிருந்த நிலையில் அரிக்கொம்பன் காட்டுயானை கம்பம் நகரின் அருகில் உள்ள பதினெட்டாம் கால்வாய் செல்லும் பாதை, கழுதை மேடு ஓடைக்கு பக்கத்தில், நடராஜன் கல்யாண மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றித்திரிந்தது.


அட்டகாசம்:


எதிர்பாராத விதமாக யானை ஊருக்குள் நுழைந்தது. அரிசிகொம்பன் யானை நடமாட்டத்தை கண்ட பொதுமக்கள் பீதிஅடைந்தனர்.  ஊருக்குள் வந்த யானை  நந்தகோபாலன் தெரு, முத்துராமலிங்க தேவர் தெரு , மின்சார அலுவலக பகுதிகளில் யானை அட்டகாசம் செய்தது. அப்பகுதியில் இருந்த ஆட்டோ, மதில் சுவர்கள் மற்றும் சாலையோரத்தில் நின்றிருந்த வாகனங்கள் பொருட்களை சேதப்படுத்தியது.


இதனால் கம்பம் பகுதியில் பொதுமக்களிடையே பெரும் பீதி ஏற்பட்டது. தகவலறிந்து வந்த தேனி மாவட்ட வனவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையிலான போலீசார் அப்பகுதியில் பொதுமக்களை பாதுகாப்பாக இருக்க வாகனத்தில் வீதி வீதியாக சென்று அறிவுருத்தினர்.  இதனைத்தொடர்ந்து குடியிருப்பு பகுதிகளுக்குள் அட்டகாசம் செய்து வரும் யானையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.