தமிழர்கள் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் வசித்து வருகின்றனர். குறிப்பாக, தென்னிந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் தமிழர்கள் பரவியுள்ளனர். 

Continues below advertisement


கேரளாவில் வசிக்கும் தமிழர்கள்:


கேரளாவில் மட்டும் லட்சக்கணக்கான தமிழர்கள் உள்ளனர். கேரளாவில் உள்ள தேவிகுளம், பீர்மேடு, உடும்பன்சோலை போன்ற பகுதிகளில் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களாக தமிழர்களே இன்றளவும் உள்ளனர். இவர்கள் அனைவரும் 19ம் நூற்றாண்டே தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக சென்றவர்கள்.


1870 காலகட்டத்தில் திருநெல்வேலி, மதுரை ஆகிய பகுதிகளில் இருந்த தமிழர்கள் அன்று இந்தியாவை ஆண்ட ஆங்கிலேயர்களால் அந்த பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். சுமார் 2 நூற்றாண்டுகளாக அந்த பகுதிகளில் கடுமையாக உழைத்து கரடு முரடான மலைகளை தேயிலை காடுகளாக மாற்றியவர்கள். 


சாதிச் சான்றிதழுக்காக அவதி:


ஆனால், இன்று அடிப்படை உரிமைக்காக கேரள மண்ணில் அவதிப்பட்டு வருகின்றனர். மூணார், பீர்மேடு, உடும்பன்சோலை. தேவிகுளம் ஆகிய பகுதிகளில் வசிக்கும் தமிழ் மாணவர்கள் பலருக்கு்ம் சாதிச் சான்றிதழ்களே இல்லாமல் உள்ளது. தங்களுக்கு சாதிச்சான்றிதழ் கொடுக்க வேண்டும் என்று கேரள அதிகாரிகளிடம் இந்த தமிழர்கள் மனு அளித்தால், 1950 காலகட்டத்தில் அவர்களது முன்னோர்கள் அங்கு பிறந்ததற்கான சான்றிதழ்களை கொண்டு வருமாறு உத்தரவிடுகின்றனர். 




1950 காலகட்டத்தில் படிப்பறிவு, சான்றிதழ்கள் என்பது இந்தியாவில் 90 சதவீத மக்களுக்கு கிடையாது. ஆனாலும், அந்த சான்றிதழை கொண்டு வர சொன்னால் எப்படி கொண்டு வருவது? என்று தமிழர்கள் புலம்புகின்றனர். மேலும், அந்த காலத்தில் தங்களது தாத்தாமார்கள் இங்கு வாழ்ந்தனர் என்றும், ஆனால் அவர்களது சான்று இல்லை என்று கூறினாலும் அதை கேரள அதிகாரிகள் ஏற்க மறுத்து வருவதாகவும் அங்கு வசிக்கும்  தமிழர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.   


இடர்கள்:


இதுமட்டுமின்றி மனுவை மலையாளத்தில் எழுதித் தருமாறும் அங்குள்ள அதிகாரிகள் வலியுறுத்துவதாகவும் அங்கு வசிக்கும் மக்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். அங்கு வசிக்கும் தமிழர்களுக்கு மலையாளம் சரளமாக பேச வரும் என்றாலும், எழுதவும், படிக்கவும் வராது. 


மேலும், தமிழ்நாட்டில் உள்ள சாதிக்கு கேரளாவில் வேறு பெயர் இருக்கிறது. இதனால், தமிழர்கள் மனுவில் குறிப்பிட்டுள்ள சாதி கெஜட்டில் இல்லை என்ற காரணத்தை மேற்கோள் காட்டியும் சாதிச்சான்றிதழ் தர மறுப்பு தெரிவிக்கின்றனர். இதனால், அங்கு வசிக்கும் தமிழ் மாணவர்களின் கல்வி கேள்விக்குறியாகி வருகிறது. 




தமிழ்நாட்டில் நீலகிரி மாவட்டத்தில் கூடலூர் உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவு மலையாள மக்கள் வசிக்கின்றனர். ஆனால், அவர்களுக்குத் தேவையான சான்றுகள் தமிழக அரசால் முறையாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால், தமிழர்களுக்கான சான்றுகளை கேரள அரசு வழங்க தயக்கம் காட்டி வருகிறது. 


வாக்குகள் மட்டும் வேண்டுமா?


கேரளாவில் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களாக உள்ள தமிழர்களின் கல்வி வளர்ச்சிக்குத் தேவையான சாதிச்சான்றிதழைத் தர மறுத்தாலும், வாக்காளர் அடையாள அட்டையை தவறாமல் அளித்துள்ளனர். அதாவது, கேரளாவில் வசிக்கும் தமிழர்களின் வாக்குகள் மட்டும் அங்குள்ள அரசியல் கட்சிகளுக்குத் தேவை என்றும், ஆனால் தமிழர்களின் உரிமைகள் மற்றும் வளர்ச்சியில் அவர்களுக்கு அக்கறை இல்லை என்பதையே இது காட்டுகிறது. 


தீர்வு காணுமா தமிழக அரசு?


தேவிகுளத்தில் மட்டும் 99 சதவீதம் தமிழர்களே உள்ளனர். சாதிச்சான்றிதழ் இல்லாத காரணத்தால் அந்த மாநில மொழியான மலையாள மொழியை கற்பதிலும் அவர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால், கேரள அரசின் மாநில அரசுத் தேர்வுகளுக்குத் தயார் ஆவதிலும் இந்த தமிழர்களுக்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. 


கேரளாவில் மட்டும் சுமார் 50 லட்சம் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். அவர்களின் கல்வி நலன் கருதி தமிழ்நாடு அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அங்கு வசிக்கும் தமிழர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கேரள முதலமைச்சருடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெருக்கமான நட்பு கொண்டவர் என்பதால் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உதவி செய்ய வேண்டும் என்று அங்கு வசிக்கும் தமிழர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.