தமிழ்நாட்டில் மே மாத காலத்தில் கோடை வெப்பமானது, இயல்பு நிலையை விட அதிகமாக இருக்கும். இந்த காலத்தை குறிக்கும் வகையில், அக்னி நட்சத்திர வெயில் என்றும் கத்திரி வெயில் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நிலையில், கத்திரி வெயில் தொடங்கியது என்றாலே, மக்களுக்கு ஒருவித எச்சரிக்கை உணர்வு தோன்றிவிடும். அதாவது, இந்த காலத்தில் அதிக வெயில் இருக்கும் என்று.
கத்திரி வெயில்:
இந்த தருணத்தில், நேற்றைய தினம் கத்திரி வெயில் தொடங்கியது. இதையடுத்து, இனி வரும் நாட்களில் வெயில் அதிகரிக்கும் என்று பொதுவான எதிர்பார்ப்பானது, சிலரிடம் இருந்தது. ஆனால், நிலைமை வேறாக இருந்தது. நேற்று வெயிலுக்கு பதிலாக பல மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னை உள்ளிட்ட 10 மேற்பட்ட மாவட்டங்களிலும் மழை பெய்ததால் குளிர்ச்சியான சூழல் நிலவியது.
இதனால், சிலர் கத்திரி வெயிலில், வெயில் இல்லாமல் மழை பெய்கிறது என நகைச்சுவையாக கருத்துகளை சமூக வலைதளங்களில் பகிர்வதை பார்க்க முடிந்தது.
வானிலை மையம் விளக்கம்:
இந்நிலையில், கத்திரி வெயில் தொடர்பாக வானிலை மையம் தெரிவித்துள்ளதாவது, “ கத்திரி வெயில் என்பது அறிவியல்பூர்வமானது இல்லை. இந்த வழக்கமானது, முந்தைய காலத்தில் இருந்து, பஞ்சாங்கத்தை அடிப்படையாக கொண்டு நம்பிக்கையின் அடிப்படையில் பின்பற்றப்படுகிறது. இது அறிவியல் பூர்வமானது இல்லை என்பதால் அக்னி நட்சத்திரம் குறித்து , இந்திய வானிலை மையம் அறிவிப்பு எதுவும் வெளியிடாது என சென்னை மண்டல வானிலை மைய இயக்குநர் அமுதா விளக்கமளித்துள்ளார்.
பரணி நட்சத்திரம் தொடங்கி கிருத்திகை நட்சத்திரம் வரை, சூரியனின் பயணிக்கின்ற காலமே கத்திரி வெயில் எனவும் அக்னி நட்சத்திரம் எனவும் அழைக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.